பாப்கார்ன் 80 ரூபாய்; வாட்டர் பாட்டில் 40 ரூபாய்! : தியேட்டர்கள் மீது எரிச்சலைக் கொட்டிய நடிகர்!

ருஷத்துக்கு தமிழில் 200 படங்கள் வந்தாலும் கல்லா கட்டுவது என்னவோ அதிகபட்சம் ஒரு டஜன் படங்கள் தான். இதற்கு முக்கிய காரணம் திருட்டு விசிடியும், ஆன்லைன் பைரஸியும் என்பது தான் திரையுலகில் பொறுப்பில் இருக்கிற நிர்வாகிகள் பொதுவாக வைக்கிற குற்றச்சாட்டு.

மேற்சொன்ன இரண்டு முக்கிய காரணங்களினால் தான் ரசிகர்கள் தியேட்டருக்கு படம் பார்க்க வருவது குறைந்து விட்டது என்று மேடைக்கு மேடை பேசியும் வருகிறார்கள்.

ஆனால் அது மட்டுமே காரணமல்ல, இன்னொரு முக்கியமான காரணம் தியேட்டரில் டிக்கெட் விலையும், இதர கட்டணங்களும் தான் என்று எரிச்சலோடு பேசினார் நடிகர் லிவிங்ஸ்டன்.

நேற்று நடந்த ”சரவணன் இருக்க பயமேன்” பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய லிலிங்ஸ்டன் தியேட்டருக்குச் சென்று வந்த தனது அனுபவ எரிச்சல்களை கொட்டித் தீர்த்து விட்டார்.

”நான் எந்தப்படம் வந்தாலும் குடும்பத்தோடு தியேட்டருக்குப் போய் தான் பார்ப்பேன். படம் நன்றாக இருந்தால் அதை பத்து தடவைகள் கூடப் பார்ப்பேன். அந்தப் படங்களை எனது நண்பர்களிடமும் சொல்லி பார்க்கச் சொல்லுவேன். நன்றாக இல்லையென்றால் திட்டிக் கொண்டே வந்து விடுவென்.

சில படங்களையெல்லாம் பார்த்து விட்டு வரும் போது இதற்குப் போய் இவ்வளவு பணம் வீணாகி விட்டதே? என்று வருத்தம் வரும். ஏனென்றால் ஒரு படத்தைப் பார்க்க டிக்கெட் விலை 120 மட்டுமல்ல, பார்க்கிங் கட்டணம், கேண்டீன் விலை எல்லாம் சேர்த்து ஒரு குடும்பம் படம் பார்க்க போனால் குறைந்தது ஆயிரத்து ஐநூறு ரூபாய் செலவாகி விடுகிறது.

பார்க்கிங் கட்டணம் 100 என்று சொல்கிறார்கள், ஒரு சின்ன வாட்டர் பாட்டிலை 40 ரூபாய்க்கு விற்கிறார்கள். ஒரு பாப்கார்ன் பாக்கெட்டை 80 ரூபாய்க்கு விற்கிறார்கள். இந்த விலை வைத்து விற்றால் ரசிகர்கள் எப்படி தியேட்டருக்கு படம் பார்க்க வருவார்கள்? இதை எல்லோரும் யோசித்துப் பார்க்க வேண்டும். தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பில் இருப்பவர்கள் திருட்டு வி.சி.டியை ஒழித்தால் மட்டும் போதாது. இதுபோன்ற தியேட்டர்களில் உள்ள அதிக கட்டணங்களையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது ரசிகர்கள் குடும்பத்தோடு தியேட்டருக்கு படம் பார்க்க வருவார்கள்” என்றார்.

LivingstonRegina CassandraSaravanan Irukka BayamaenSaravanan Irukka Bayamaen Press MeetUdhayanidhi Stalin
Comments (0)
Add Comment