பாடலாசிரியர், பாடகர், நடிகர் என பன்முகம் கொண்ட பாடலாசியர் அருண்ராஜா காமராஜ் அடுத்த லெவலான இயக்குநர் அவதாரம் எடுக்கிறார்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கபாலி’ படத்தில் இடம்பெற்ற ‘நெருப்புடா…’ பாடலை எழுதியதோடு மட்டுமில்லாமல் அதை தனித்தன்மையான குரலில் பாடி பட்டி தொட்டியெங்கும் உள்ள ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றார் அருண்ராஜா காமராஜ்.
அதைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘பைரவா’ படத்தில் இடம்பெற்ற ‘வர்லாம் வர்லாம் வா பைரவா’வும் அவருடைய ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்தது. பாடல் எழுதுவது, பாடுவதோடு மட்டும் நின்று விடாமல் சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘மரகத நாணயம்’ படத்திலும் வித்தியாசமான கேரக்டரில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார்.
இப்படி திரைத்துறையின் ஒவ்வொரு துறையிலும் தனக்கென்று தனித்தன்மையோடு இயங்கி வரும் அருண்ராஜா காமராஜ் தனது வாழ்நாள் கனவான இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். முதல் படமாக பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் படத்தை இயக்கும் வேலையில் மும்முரமாகியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசும்போது… ‘நான் சினிமாவில் இயக்குநராகத்தான் ஆசைப்பட்டு வந்தேன். அதுதான் எனது வாழ்நாள் ஆசையாகவும், கணவாகவும் இருந்து வருகிறது. இதற்கு முன்பு பல குறும்படங்களை எழுதி இயக்கி குறும்பட போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். ‘வேட்டை மன்னன்’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவமும் எனக்கு மேலும் உதவியாக இருந்தது.
தற்போது நான் இயக்கப் போகும் இந்தப் புதுப்படத்தை பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இயக்கப் போகிறேன். சமீபத்தில் பல லட்சம் ரசிகர்களை கவர்ந்து கொண்டாட வைத்த இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை ஆட்டத்திற்கு முன்பே இக்கதையை தயார் செய்து விட்டேன். கனவுகளுக்காக போராடுவதும், அதற்கு குடும்பத்தாரின் ஆதரவு எவ்வளவு முக்கியம் என்றும், ஒரு தந்தைக்கும் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் அவரது பெண்ணுக்கும் இருக்கும் அழகான உறவையும் இப்படத்தில் காணலாம்.
நெகிழ வைக்கும் சில நிஜ வாழ்க்கை சம்பவங்களையும் இக்கதையில் சேர்த்துள்ளேன். என்று சொல்லும் அருண்ராஜா காமராஜ் கிரிக்கெட்டும் ஆட தெரிந்த, நடிக்கவும் தெரிந்த பெண்களை கதாநாயகி மற்றும் மற்ற முக்கியமான கதாபாத்திரங்களுக்கு தேர்ந்தெடுக்க ஆடிஷன் நடத்த இருக்கிறாராம்.
இந்த ஆடிஷனில் நீங்களும் பங்குபெற உங்களைப் பற்றிய விபரங்களை iswearicanact@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.