‘மாவீரன் கிட்டு’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியீட்டு விழா இன்று லயோலா கல்லூரியில் நடைபெற்ற Licet Engenia கலைவிழாவில் வைத்து நடைபெற்றது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குநர் சமுத்திரகனி வெளியிட படத்தின் டீசரை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டார். படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசருக்கு கல்லூரியில் உள்ள அனைவரிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
விழாவில் இயக்குநர் சுசீந்திரன் , நாயகன் விஷ்ணு விஷால் , நாயகி ஸ்ரீ திவ்யா , படத்தில் முக்கிய வேடமேற்று நடித்திருக்கும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் , தயாரிப்பாளர் சந்திர சாமி , நடிகர் ஹரிஷ் உத்தமன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இயக்குநர் சமுத்திரகனி , பா.ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய இயக்குநர் சுசீந்திரன் ”நான் இயக்கிய , தயாரித்த 2 திரைப்படங்களின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர்களை இங்கு தான் வெளியிட்டேன். அதை தொடர்ந்து இப்போது மீண்டும் நான் தயாரித்து இயக்கியுள்ள “ மாவீரன் கிட்டு “ திரைப்படத்தின் டீசரை இங்கு வைத்து வெளியிடுகிறேன். எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது ஏனென்றால் எனக்கு லயோலா கல்லூரி மிகவும் பிடித்த இடம். முதலில் என்னுடைய தந்தைக்கு நன்றி கூற வேண்டும் ஏனென்றால் அவர் மூலமாக தான் இப்படத்தின் தயாரிப்பாளர் சந்திர சாமி எனக்கு நண்பரானார். அழகர் சாமியின் குதிரை திரைப்படத்துக்காக எனக்கு தேசிய விருது கிடைத்தது அதே போல் “ மாவீரன் கிட்டு “ திரைப்படத்துக்கும் எனக்கு தேசிய விருது கிடைக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
நாயகன் விஷ்ணு விஷால் பேசியபோது ”எனக்கு லயோலா கல்லூரி மிகவும் பிடித்தமான இடம். சினிமாவில் உள்ள எல்லோருக்கும் லயோலா கல்லூரிக்கும் கண்டிப்பாக தொடர்பு இருக்கும். எனக்கும் லயோலா கல்லூரிக்கும் என்ன தொடர்பு என்று கேட்டால் என்னுடைய மனைவி லயோலா கல்லூரியின் முன்னால் மாணவி ஆவார். நான் இப்படத்தின் மூலம் இயக்குநர் சுசீந்திரன் அவர்களுடன் மூன்றாவது படத்தில் இணைகிறேன். இப்படம் நிச்சயம் உங்கள் மனதை தொடும் ஒரு படமாக இருக்கும் என்றார்.
பின்னர் பேசிய இயக்குநர் சமுத்திரகனி ”இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும் போது எனக்கு மாபெரும் போராளி மாவீரன் திலீபன் அவர்கள் தான் நினைவுக்கு வருகிறார். இயக்குநர் சுசீந்திரன் இப்படத்தின் மூலம் அழுத்தமான ஒரு பதிவை தமிழ் சினிமாவுக்கு வழங்குவார் என்று நினைக்கிறன்” என்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கபாலி பட இயக்குநர் பா.ரஞ்சித் பேசியபோது, ”இப்படத்தின் டீசரை பார்க்கும் போது சமூகத்துக்கு தேவையான முக்கியமான ஒரு படைப்பை இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ளார் என்பது தெரிகிறது. இல்லாதவர்கள் ஒரு விஷயத்துக்காக போராடும் போது தான் அது புரட்சியாக மாறுகிறது. இப்படத்தை பார்க்கும் போது நாயகன் ஏதோ ஒரு முக்கிய சமூக பிரச்சனைக்காக போராடுவது போல் தோன்றுகிறது” என்றார்.