இதுவரை இல்லாத அளவுக்கு விஜய்யின் ‘மெர்சல்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் சில வாரங்களுக்கு முன்பு மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.
கிட்டத்தட்ட 80 சதவீத நுழைவுச் சீட்டுகள் விஜய் ரசிகர்களுக்கே கொடுக்கப்பட்டது. இதனால் விழா நடந்த அரங்கமே விழாக்கோலம் பூண்டது. இந்த விழாவில் மெர்சல் படத்தின் டீஸர் வெளியிடப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி டீஸர் காண்பிக்கப்படவில்லை.
இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் சீக்கிரமே மெர்சல் படத்தின் டீஸரை வெளியிடுங்கள் என்று அந்தப்படத்தை தயாரித்து வரும் ஸ்ரீ தேணாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்த வண்ணம் இருக்கிறார்கள்.
ஆனால் உண்மையில் நடந்தது என்ன தெரியுமா?
அஜித்தின் விவேகம் வசூல் பாதித்து விடக் கூடாது என்பதற்காகத்தான் மெர்சல் படத்தின் டீஸர் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம். இதுகுறித்து மெர்சல் தயாரிப்பாளரிடம் பேசியிருக்கிறார் விவேகம் படத் தயாரிப்பாளர். ரகசியமாக நடந்த அந்தப் பேச்சு வார்த்தை குறித்து விவேகம் படத்தின் எடிட்டர் ரூபன் சொல்வதைக் கேளுங்கள்…
‘சமீபகாலமாக சினிமாவுக்கு எதிரான நிறைய விஷயங்கள் நடந்து வருகின்றன. சினிமாவை பற்றி யார் யாரோ விமர்சனம் செய்ய தொடங்கி விட்டனர்.
சிலர் பணம் வாங்கிக் கொண்டு விமர்சனம் செய்கின்றனர். இதனால் சில படங்கள் ரசிகர்களால் வெறுக்கப்படுகின்றன. அதோடு நடிகர்களையும் வெறுக்கிறார்கள். இப்படி உலகம் முழுவதும் தவறான விஷயங்கள் பரவுகிறது.
இது எல்லாவற்றையும் தாண்டி அஜித், விஜய், இயக்குனர்கள் அட்லீ, சிவா, தயாரிப்பாளர்கள் சத்யஜோதி பிலிம்ஸ், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் ஆகியோரின் நல்ல எண்ணத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஒவ்வொருவரும் மற்றொருவரின் உழைப்பை மிகவும் மதித்து வேலை செய்கின்றனர். தன் படத்தின் டீசர் வருவதால் மற்றொருவரின் படம் பாதிக்கப்படக் கூடாது என்று பார்த்து பார்த்து வேலை செய்கின்றனர்” என்று விஜய் உள்ளிட்ட மெர்சல் படக்குழுவினரை பாராட்டியிருக்கிறார்.
ஏற்கனவே விவேகம் வசூலைப் பாதிக்கக் கூடிய வகையிலான சர்ச்சைகள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கிற நிலையில், அப்படத்தில் வேலை செய்தவரே ரிலீஸான இரண்டு மூன்று நாட்களுக்குள் இப்படி ஒரு விஷயத்தை வெளியில் கசிய விட்டிருப்பது படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.