இந்தியாவில் எத்தனையோ பிரபல இயக்குநர்கள் இருந்தாலும் இந்த ஜானரை யாருமே யோசிக்காமல் இருந்தது தான் இப்போது தமிழ்சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாக அமைந்திருக்கிறது.
பொதுவாக ஆங்கிலப் படங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த ‘ஸோம்பி’ வகை ஜானர் படங்கள் வேறு எந்த இந்திய மொழிகளிலும் வந்ததில்லை.
அந்த வகையில் இந்தியாவிலேயே அதிலும் தமிழில் முதல் ஸோம்பி வகை திரைப்படம் என்கிற பெருமையோடு நாளை உலகம் முழுவதும் ரிலீசாகிறது ‘மிருதன்’.
சென்ற ஆண்டு தொடர்ந்து மூன்று ஹாட்ரிக் ஹிட்டுகளை கொடுத்த ஜெயம் ரவியின் படமென்பதால் படத்தை வாங்கி திரையிடுவதில் கூட தியேட்டர் உரிமையாளர்கள் போட்டி போட்ட கதையெல்லாம் கடந்த சில வாரங்களாக நடந்து வந்தது.
அந்தளவுக்கு எதிர்பார்ப்பை ஏறபடுத்தியிருக்கும் ‘மிருதன்’ திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 450க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீசாகிறது.
குளோபல் இன்போடெயின்மென்ட் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ள இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடித்திருக்கிறார்.
‘நாய்கள் ஜாக்கிரதை’ வெற்றிப்படத்தை கொடுத்த சக்தி சவுந்தர் ராஜன் இயக்கியிருக்கிறார்.
மிருகத்தில் பாதி வார்த்தையும், மனிதனில் பாதி வார்த்தையும் தான் ‘மிருதன்’ என்ற டைட்டிலின் அர்த்தமாம்.
இறந்த பிறகும் மனிதனைப் போலவே நடமாடும் வெற்றுடம்பு மனிதனைத் தான் ஸோம்பி என்பார்கள். பாலிவுட்டில் இந்த ஜானர் படங்கள் எக்கச்சக்கம் வந்திருந்தாலும் தமிழில் இது முதல் முயற்சி. அதை சரியாகச் செய்திருக்கிறார் இயக்குநர் சக்தி சவுந்தர்ராஜன்.
”ஹீரோ அவரோட தங்கச்சிக்காக எந்த விஷயத்திலுமே ரொம்ப ரிஸ்க் எடுக்கக்கூடாதுன்னு நெனைக்கிற ஆள். அப்பேர்ப்பட்ட அவருக்கு ஒரு கட்டத்துல ரிஸ்க் எடுக்க வேண்டிய சிச்சுவேஷன் வர்றப்ப அதை அவர் எப்படி கையாளுகிறார்ங்கிறது தான் ஸ்டோரி.
வைரஸ் தொற்று ஒன்று யார் உடலில் புகுந்தாலும், அவர்கள் ஸோம்பி ஆகிவிடுவார்கள். அது மக்களை என்ன செய்கிறது? அந்த ஸோம்பியிடமிருந்து எப்படி தப்பிக்கிறார்ன்னு நீங்க பார்க்கிறது ரொம்ப புதுசா இருக்கும் என்று சொல்லும் ஜெயம் ரவி படத்தில் ஒரு டிராபிக் போலீஸ்காரர் கேரக்டரில் நடித்திருக்கிறாராம்.
ஜோடியாக லட்சுமிமேனன் இருக்கிறார், இவர் ஜெயம் ரவியின் முன்னாள் காதலியாக வருகிறார். அதற்காகவே படத்தில் முன்னாள் காதலி என்ற வரியில் ஆரம்பிக்கும் ஒரு பாடல் கூட இருக்கிறது.
“தமிழின் முதல் ஸோம்பி படம் என்பதால் தமிழ்சினிமா வரலாற்றில் என் பெயரும் இருக்கும். அதனால் தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்” என்கிறார் லட்சுமிமேனன். “அது மட்டுமல்ல, படம் முழுக்க ஹீரோவுடன் பயணிக்கும் என் கதாபாத்திரம் கதையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஸோம்பிக்கள் வைரஸ் மூலம் உருவானதை கண்டுபிடித்து அதை அழிக்க மருந்து கண்டுபிடிக்கும் டாக்டராக நடித்திருக்கிறேன்” என்கிறார் லட்சுமிமேனன்.
இப்படி சீரியஸான கதையில் இன்னொரு முக்கியமான மக்கள் யோசிக்க வேண்டிய சுற்றுச்சுழல் பற்றிய ஒரு விஷயத்தையும் படத்தில் வைத்திருக்கிறாராம் இயக்குநர் சக்தி சவுந்தர் ராஜன்.
”நாம் இயற்கையை அதன் போக்கில் விடாமல் சுயநலத்துக்காக அழித்துக் கொண்டிருக்கிறோம். இதனால் பாதிக்கப்படும் இயற்கை கோபத்தோடு நம்மை திருப்பி அடித்தால் என்னாகும்? என்பதையும் படத்தில் சொல்லியிருக்கிறோம்” என்கிறார்.
சிந்தனை புதுசா இருக்கு, இதோட வெற்றியும் இதுவரை இல்லாத அளவுக்கு பெருசாகவும், வேற லெவல்ல புதுசாகவும் இருக்கும்.
வாழ்த்துகள் மிருதன்!