‘மூன்றாம் உலகப்போர்’ ஒன்றை நோக்கித்தான் உலக நாடுகள் எல்லாமும் நகர்ந்து கொண்டிருக்கின்றன.
அப்படி ஒரு போர் வருமானால் நான் தான் உலகத்தில் பெரியவன் என்று மார்தட்டிக்கொள்கிற பெரிய பெரிய நாடுகள் எல்லாம் தூள் தூளாகி விடும் என்கிற அதிர்ச்சி தகவலோடு பேச ஆரம்பித்தார் சுனில், அகிலா கிஷோர் மற்றும் பலர் நடித்திருக்கும் ‘மூன்றாம் உலகப் போர்’ படத்தின் இயக்குநர் சுகன் கார்த்தி.
இந்தியாவுக்கு எதிரி நாடு என்றாலே எல்லோரும் பாகிஸ்தானைத்தான் கை காட்டுவார்கள். உண்மையில் எதிரி நாடு என்று பார்த்தால் சீனா தான். எல்லைபிரச்சனை உள்ளிட்ட வெளியில் தெரியாத எத்தனையோ இம்சைகளை அந்த நாடு நம் நாட்டுக்கு தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறது.
2025 இல் இந்தியாவும் சீனாவும் போர் புரிந்தால் அந்தப் போரில் திருமணமாகி ஆறே மாதங்களாகிய ஒரு இளம் ராணுவ வீரன் பங்கெடுக்கும் சூழல் வரும் போது அது எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதையே படத்தில் காட்டியிருக்கிறோம் என்றார்.
மேலும், ஹீரோ சுனில் கூகுளில் ராணுவம் சம்பந்தப்பட்ட பல தகவல்களை திரட்டித் தருவார். 2020இல் இந்தியா எப்படி இருக்கும்? சீனா எப்படி இருக்கும்? போன்ற விபரங்கள் எல்லாமே இணையத்தில் இருக்கின்றன. அவைகளை எல்லாம் ஆராய்ந்தோம். அதோடு நிற்கவில்லை, பெங்களூரு உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் பயணப்பட்டு அங்குள்ள நிஜ ராணுவ வீரர்களை சந்தித்து அவர்களுடைய அனுபவங்களை கேட்டறிந்தோம். இவையெல்லாம் இந்தப்படம் நாங்கள் எதிர்பார்த்த மாதிரியே சிறப்பாக வர உதவியாக இருந்தது என்றார்.
கார்கில் போரில் உயிர் நீத்த திருச்சியைச் சேர்ந்த மேஜர் சரவணின் நினைவாக படத்தில் ஹீரோ கேரக்டருக்கு அவருடைய பெயரை வைத்திருக்கிறார்களாம். முக்கால்வாசி படம் சீனாவில் நடைபெறுவது போல எடுக்கப்பட்டிருக்கிறது. மீதி கதைக்களம் சென்னையில் நகர்கிறது.
மதுபானக்கடை, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், அழகு குட்டி செல்லம் போன்ற தரமான படங்களுக்கு இசையமைத்த வேத் சங்கர் தான் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.
பாடலாசிரியர் அண்ணாமலையின் பாடல் வரிகளில் இந்தியாவை பெருமிதப்படுத்தும் ஒரு பாடலுக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்று நம்பிக்கையோடு சொல்கிறது படக்குழு!
தேசியத்தை கெளரவிக்கும் படத்துக்கும் கிடைக்கட்டும் மதிப்பு மிக்க தேசியவிருது!!!