நடிகர்களின் இரக்க குணத்தை காசாக்கும் தயாரிப்பாளர்கள்! – நடிகர் சங்கம் கண்டனம்

சிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் முன்னணி ஹீரோவின் படமொன்று திட்டமிட்ட தேதியில் ரிலீசாகவில்லை என்றால் அவருக்குத்தான் பெரும் சங்கடம் ஏற்படும்.

இதனாலேயே ரிலீஸ் நேரத்தில் கையில் பணமில்லாமல் தத்தளிக்கும் தயாரிப்பாளருக்கு கேட்ட சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை விட்டுக் கொடுப்பதும், அல்லது பைனான்ஸ் வாங்கிக் கொடுப்பதும் வழக்கம். அப்படி இரக்கப்படும் ஹீரோக்களை சில தயாரிப்பாளர்கள் வேண்டுமென்றே பலவீனமாக எடுத்துக் கொண்டு ஒப்புக்கொண்ட பணத்துக்கு பட்டை நாமம் சாத்துவது கோடம்பாக்கத்தில் ஆரம்பித்திருக்கிறது.

தயாரிப்பாளர்களின் இந்த செயலை கடுமையாக கண்டித்திருக்கிறது நடிகர் சங்கம். இதுகுறித்து நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ‘மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிப்பான ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தில் விஷால் அவர்கள் நடித்தமைக்காகவும், ‘வீரசிவாஜி’ திரைப்படத்தில் விக்ரம் பிரபு நடித்தமைக்காகவும் ஊதிய பாக்கி வழங்கப்படாமல் உள்ளது. மேலும் ’96’ என்ற திரைப்படத்தில் நடித்த விஜய்சேதுபதிஊதிய பாக்கி பெற்றுக் கொள்ளாமலேயே திரைப்படம் திரையிடப்பட்டது.

மேற்கண்ட திரைப்படங்கள் திரையிடும் கடைசி நேரத்தில் நடிகர்களின் சூழ்நிலையை இந்த தயாரிப்பு நிறுவனம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு தொடர்ந்து ஊதியம் வழங்காமல் படங்களை திரையிட்டுள்ளது. படம் வெளியீட்டின் போது இக்கட்டான சூழ்நிலையில் என்றும் நடிகர்கள் தங்கள் வருமானத்தை விட்டுக் கொடுத்தே தயாரிப்பாளர்களுக்கு உதவி வருகிறார்கள். ஆனால் அந்த நற்செயலை பலவீனமாக எடுத்துக் கொண்டு சில தயாரிப்பாளர்கள் நடிகர்களை நிர்பந்தப்படுத்துவது அல்லது பரஸ்பரம் ஒப்புக்கொண்ட சம்பளத்தை தர மறுப்பது என்பதை வழக்கமாக்கி கொண்டது.

கடந்த காலங்களிலிருந்தே பல தயாரிப்பாளர்கள் நடிகர்களுக்கு இதுப்போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வரும் நிலையில் இதுகுறித்து நிர்வாகக்குழு கலந்து ஆலோசித்தது. அதனடிப்படையில் இனிவரும் காலங்களில் இதுபோன்று செயல்படும் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும், தயாரிப்பாளருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்ந்த நடிகர்கள்,நடிகையர்கள்) எந்த ஒரு நிகழ்விற்கும் திரைப்படங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் தற்போது மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிப்பு நிறுவனம் சம்பந்தமான எந்த ஒரு நிகழ்விற்கும் திரைப்படங்களுக்கும் நமது சங்க உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'96' MovieNadigar SangamVijay SethupathiVikram Prabhuvishal
Comments (0)
Add Comment