இந்த கொண்டாட்டத்துக்கு தானே இத்தனை நாளாய் காத்திருந்தோம் என்று மகிழ்ச்சி பொங்க சொல்லக் காத்திருக்கும் ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக வந்திருக்கிறது அந்தச் செய்தி!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் தயாராகியுள்ள கபாலி படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து தற்போது தொழில்நுட்ப வேலைகள் வேகம் எடுக்க ஆரம்பித்திருக்கின்றன.
முதல்முறையாக ரஜினியின் படத்துக்கு சந்தோஷ் நாராயணனின் இசை என்பதால் படத்தின் டீஸருக்கே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
அதேபோல படத்தின் ஆடியோவை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தார்கள். வருகிற ஜூன் 12ம் தேதி கபாலி ஆடியோ ரிலீஸ் என்கிற அதிகாரப்பூர்வமான செய்தி கடந்த சில தினங்களாக வந்த நிலையில் இப்போது கபாலி படத்தின் ஆடியோவுக்கு விழா எதுவும் நடைபெறவில்லை எனவும் அன்றைய தினம் பாடல்களை நேரடியாக ஆன்லைனிலேயே வெளியிட்டு விட படக்குழு முடிவெடுத்திருப்பதாக புதிய செய்தி வெளியாகியிருக்கிறது.
தற்சமயம் கோடை விடுமுறையை கழிக்க ரஜினிகாந்த் அமெரிக்காவுக்கு சென்றிருப்பதால் ரஜினி இல்லாமல் விழா நடத்துவது சிறப்பாக இருக்காது என்பதால் இப்படி ஒடு முடிவை தயாரிப்பாளர் எடுத்திருப்பதாகத் தெரிகிறது.
வைரலாகப் பரவி வரும் இந்த செய்தி ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.