பணம் கொடுத்தால் தான் பாடல், படக்காட்சிகள் கிடைக்கும்! : டிவி சேனல்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் கிடுக்குப் பிடி

துவரை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் தாங்கள் தயாரிக்கும் படங்களின் பாடல் காட்சிகள், ட்ரெய்லர்கள், படக்காட்சிகள் உள்ளிட்டவைகளை படத்தின் புரமோஷன்களுக்காக நினைத்து சாட்டிலைட் சேனல்களுக்கு இலவசமாக கொடுத்து வந்தனர்.

ஆனால் சேனல்களோ அந்த பாடல் காட்சிகளையும், படக்காட்சிகளையும் வைத்து தனித்தனியாக நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒளிபரப்பி கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள்.

அத்தோடு அந்த சம்பாத்தியத்தில் படத்தயாரிப்பாளர்களுக்கு நயா பைசா கூட கொடுப்பதில்லை. மேலும் பெரும்பாலான சேட்டிலைட் சேனல்களில் ட்ரெய்லர் என்கிற நிகழ்ச்சியே இல்லாமல் அந்த இலவச புரமோஷனும் நிறுத்தப்பட்டு விட்டது.

இதை தட்டி கேட்கவும், படக்காட்சிகள், பாடல் காட்சிகளுக்கு சரியான தொகையை வாங்கித்தரவும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முந்தைய நிர்வாகிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் தற்போது புதிதாக வந்திருக்கும் விஷால் தலைமையிலான புதிய அணி இந்த விவகாரத்தில் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

இதுகுறித்து அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் நேற்று ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

அதில், தயாரிப்பாளர்களே! இனிமேல் உங்கள் படங்களின் டிரைலர்கள், கிளிப்பிங்குகள், பாடல்கள் ஆகியவற்றை எந்தவொரு சேனலுக்கும் இலவசமாக கொடுக்க வேண்டாம். அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை பெறுவதற்காக சேனல்களிடம் பேசி வருகிறோம். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும்’ என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஷால் துணிந்து எடுத்திருக்கும் இந்த முடிவு தேன் கூட்டில் கையை வைத்த கதையா? அல்லது அதே தேன் கூட்டில் லாவகமாக தேனெடுத்து பருகிய செயலா? என்பது போகப் போகத்தான் தெரியும்.

producers councilTamil Film Producers CouncilTFPCvishal
Comments (0)
Add Comment