தமிழகத்தின் முன்னணி ஓடிடி தளமாக வளர்ந்து வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், தனது அடுத்த வெளியீடாக நடிகை நயன்தாரா நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் GS இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு இணைந்து தயாரித்திருக்கும் திரில்லர் டிராமா திரைப்படம் “O2” திரைப்படத்தை ஜூன் 17 அன்று பிரத்யேகமாக வெளியிடுகிறது.
இயக்குநர் விக்னேஷ் GS எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தமிழ் A அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். செல்வா RK படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைக்கும் பரபரப்பான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் மாட்டிகொள்கிறாள். நுரையீரல் பிரச்சனைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை, பஸ்ஸில் மாட்டிக்கொண்ட மற்றொரு பயணியான காவல் அதிகாரி குறி வைக்க, தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதை பரபரப்பாக சொல்லும் படம் தான் “O2”. தமிழ்நாடு, கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும், பரபரப்பான பொழுதுபோக்கு திரில்லர் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.