இயக்குநர் பாண்டிராஜ் பொங்கிய ஒரு பேமிலி உப்புமா தான் இந்த பரிமளா & கோ
சென்னை பட்டினப்பாக்கத்தில் இருக்கும் பெரிய ட்ரக் ரவுடி சாண்டி. அவர் ஜெயராமின் இளையமகள் அனந்திகா அனில்குமாருக்கு லவ் டார்ச்சர் கொடுக்கிறார். அதனால் ஜெயராம் சாண்டியை எச்சரிக்கிறார். இருந்தும் நச்சரிப்பை தொடர்கிறார் சாண்டி. ஜெயராமின் மூத்த மகளான சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி சாண்டியை தெருவில் வைத்து அசிங்கப்படுத்துகிறார். அதில் கோபமடையும் சாண்டி ஜெயராமிடம், “உன் இரு பெண்களும் எனக்குத்தான்” என்கிறார். இதனால் ஜெயராம் தன் குடும்பத்தோடு இணைந்து சாண்டியை கொலை செய்யலாம் என்ற முடிவை எடுக்கிறார். அந்த முடிவு எந்தத்திசையை நோக்கி இந்த பரிமளா & கோ வை இழுத்துச் செல்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை
கதையின் நாயகனாக ஜெயராமிற்கு படத்தில் வேல்யூவான காட்சிகள் இல்லாமையால் அவரது நடிப்பு பெரிதாக ஈர்க்கவில்லை. ஊர்வசி காமெடி காட்சிகளுக்கு கியாரண்டி தருகிறார். இரு மகள்களாக நடித்திருக்கும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில்குமார் இருவரும் கொடுத்த வேலையைச் செய்துள்ளனர். மிஸ்கின் கேரக்டர் வலுவாக எழுதப்பட்டுள்ளது. அவரும் நன்றாக நடித்துள்ளார். யோகிபாபு காமெடி பெரிதாக எடுபடவில்லை
ஜார்ஜ் வில்லியம்ஸ் தனது ஒளிப்பதிவை திறம்பட செய்துள்ளார். சென்னையின் பட்டினப்பாக்கச் சாலைகளைச் சிறப்பாக காட்டியுள்ளார். இசையமைப்பாளர் பாடல்களில் பெரிதாக கவனம் சேர்க்கவில்லை. பின்னணி இசை பரவாயில்லை
படத்தில் எமோஷ்னல் கனெக்டிங் என்பது இல்லை. ஒரு சின்ன போலீஸ் கேஸ் என்றாலே நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பம் நடுங்கிவிடும்..அதுதான் எதார்த்தம். ஆனால் ஜெயராம் குடும்பம் எந்த சீரியஸ்னெஸும் இல்லாமல் ப்ளாக் காமெடி செய்துகொண்டிருக்கிறார்கள்..அதனாலே அந்தக்குடும்பம் மீது நமக்கு எந்த ஈர்ப்புமில்லை
மிகவும் லேஸியான திரைக்கதையால் பரிமளா & கோ பரிணமிக்கவில்லை
2.5/5