இது படமும் அல்ல… பாடமும் அல்ல…. : ‘பசங்க’ளின் வாழ்க்கை!

யாரெல்லாம் சமூகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட ஹீரோக்கள்? என்பதை சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழை வெள்ளம் வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது.

வளரும் நடிகர்கள் தங்கள் சக்திக்கு எவ்வளவு முடியுமோ? அந்தளவுக்கு உதவிகளைச் செய்ய, முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் சூர்யா மூன்று கிராமங்களை தத்தெடுத்ததோடு நின்று விடவில்லை.

சென்னையோ சோகத்தில் இருக்கும் போது பசங்க 2 படத்துக்கான கொண்டாட்டம் தேவையில்லை. அதனால் பட ரிலீசின் போது கட்-அவுட், பேனர்கள், போஸ்டர்கள் என எந்த தடபுடல்களும் தேவையில்லை. மாறாக அந்த பணத்தைக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள் என்று அன்பாக அட்வைஸ்களை ரசிகர்களுக்கு தட்டி விட்டிருக்கிறார்.

அதே போன்றதொரு சமூக அக்கறை தான் அவர் தயாரித்திருக்கும் பசங்க 2 படத்திலும் பார்க்கலாம். அதற்காக அதுவும் அட்வைஸ் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

தொடர்ந்து இரண்டு படங்களாக கிராமத்து பசங்களின் பள்ளிக்கூட வாழ்க்கையை காண்பித்த இயக்குநர் பாண்டிராஜ் இதில் நகரத்து குழந்தைகளின் பள்ளிக்கூட அனுபவங்களை படமாக்கியிருக்கிறார்.

கதையைக் கேட்டு தயாரிக்க முன் வந்த சூர்யா இப்போது படத்திலும் ஒரு கனமாக கேரக்டரில் நடித்திருக்கிறார்.

நேற்று நடந்த பசங்க 2 பத்திரிகையாளர் சந்திப்பிலும் படத்தை விட சென்னை வெள்ளத்தில் தன்னார்வலர்களின் பங்களிப்பை பற்றித்தான் சிலாகித்துப் பேசினார்…

சமீபத்தில் பெய்த கனமழையும் வெள்ளமும் நம்முடைய சென்னைக்கு புதிய ஒரு முகத்தை தந்துள்ளது என்றே சொல்லலாம்.

இந்த வெள்ளத்தின் மூலம் நம் கண்ணுக்கு பல்வேறு தன்னார்வலர்கள் தெரிந்தனர். எனக்கு இந்த சமயத்தில் மழை வெள்ளத்தால் பாத்திக்கப்பட்டதை பற்றி பேசுவதா அல்லது, ‘பசங்க 2’ படத்தை பற்றி விரிவாக பேசுவதா என்று தெரியவில்லை.

நான் ‘பசங்க 2’ படத்தின் கதையை வேறு ஒரு படப்பிடிப்பில் இருக்கும் போது தான் கேட்டேன். கதையை கேட்டதும் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. பல ஆண்டுகளாக இயக்குநர் பாண்டிராஜ் இந்த கதையோடு வாழ்ந்திருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டேன். அவர் இந்த கதையை உருவாக்க மூன்று முதல் நான்கு ஆண்டுகள் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

நாம் நம்முடைய குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்பதை இப்படம் வலியுறுத்தும். இந்தப் படம் உங்கள் அனைவரையும் கவனிக்க வைக்கும். படத்தில் உள்ள அனைவரையும் ஒன்று சேர்த்தது படத்தின் கதைதான் என்பதில் மாற்றும் கருத்தே இல்லை. நான் இயக்குநரிடம் படத்துக்காக அவர் கொடுத்த கதையை அப்படியே எடுக்க வேண்டும் என்று கூறினேன். ஏனென்றால் கதையில் அவ்வளவு நல்ல விஷயங்கள் இருந்ததது.

ஆனால் இப்போது படம் ஒன்றரை மணி நேரப் படமாக வந்துள்ளது. நிச்சயம் படம் அனைவரையும் கவரும். படத்தில் நடித்த அனைவருக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். படத்தில் நாயகியாக நடித்துள்ள பிந்து மாதவி ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒருநாள் கோலம் போட்டு கொண்டிருந்தார், திடீர் என்று பார்த்தால் இன்னொரு நாள் கிளாப் அடித்து கொண்டிருக்கிறார். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் படத்தில் அனைவரும் ஒரு குடும்பம் போல் இருந்து வேலை செய்தார்கள் என்றார் சூர்யா.

ஆமாம் அந்த ஒற்றுமையைத் தானே சமீபத்தில் பெய்த மழை வெள்ளமும் உணர்த்தியது!

Bindu MadhavinewsPandirajPasanga 2 Press MeetSuriyaசூர்யாபசங்க 2பாண்டிராஜ்பிந்து மாதவி
Comments (0)
Add Comment