ஒரு பைசா கூட வாங்காத என் மீது கைது உத்தரவா ? : தயாரிப்பாளர் கலைப்புலி தாணு விளக்கம்

நாகர்கோவிலைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர் ஒருவர், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தமக்கு ரூ 2 லட்சம் தர வேண்டும் என்று உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த வழக்கில் தாணு சார்பில் வழக்கறிஞர்கள் உரிய நேரத்தில் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து கலைப்புலி தாணுவை கைது செய்ய நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று மாலையே திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த விவாகாரம் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறுகையில், “இது பொய்யான வழக்கு. நான் தயாரித்த திருமகன் (2007) படத்தை வாங்கித் திரையிட்டவருக்கும் இந்த தியேட்டர் உரிமையாளருக்கும் இடையிலான பிரச்சினையில், தேவையில்லாமல் என் பெயரை இழுத்து வழக்குத் தொடர்ந்துள்ளனர். அந்த தியேட்டர் உரிமையாளரிடம் நான் ஒரு பைசா கூட வாங்கவில்லை.

எந்த வகையிலும் சம்பந்தமில்லாத என் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார் அந்த தியேட்டர்காரர். அவரிடம் ரூ 2 லட்சத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றும் நிலையிலா நான் இருக்கிறேன்? இந்தப் பிரச்சினை இன்று முடிந்து விடும்…” என்றார்.

‘தன்னைத் தேடி வரும் எத்தனையோ சினிமாக்காரர்களுக்கு கேட்காமலேயே உதவி செய்பவர் கலைப்புலி தாணு. அது தமிழ்த்திரையுலகில் இருக்கின்ற அத்தனை பேருக்கும் தெரியும். அதுமட்டுமல்ல, கோயில், கிராமங்களுக்கு அடிப்படை வசதி செய்தல் என நல்ல காரியங்களுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்பவர் கலைப்புலி தாணு. அவர் மீது இப்படி ஒரு வழக்கு தொடர்ந்திருப்பதே மோசடியானது, உள் நோக்கம் கொண்டது’ என்பதே திரையுலகினரின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது,

Arrest WarrantKalaipuli s.thanuProducer Kalaipuli S Thanu
Comments (0)
Add Comment