தன்னை வைத்து படமெடுத்தவர்களையே காப்பாற்ற முடியாதவர் எப்படி சங்கத்தைக் காப்பாற்றுவார்? : விஷாலை வறுத்தெடுத்த தயாரிப்பாளர்!

டிகர் சங்கத்தைக் கைப்பற்றியதும் விஷாலைச் சுற்றி எப்போதுமே பரபரப்புகளுக்கு பஞ்சமில்லை. அதோடு நின்றால் பரவாயில்லை. இப்போது தயாரிப்பாளர் சங்கத்தையும் குறி வைத்து தேர்தலில் அவர் தலைவர் பதவிக்கு போட்டி போட முடிவு செய்திருப்பது தான் தயாரிப்பாளர்கள் பலருக்கு பெரும் எரிச்சலைக் கொடுத்திருக்கிறது.

அதிலும் விஷாலின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் எந்த மேடை கிடைத்தாலும் அங்கு துணிச்சலோடு எதிர்த்து கிழித்து தொங்க விட்டுக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ‘சிரிக்க விடலாமா’ படத்தின் ஆடியோ விழா மேடையிலும் விஷாலை இழுக்கத் தவறவில்லை அவர்.

எந்த நடிகனுமே தன் ரசிகர்களுக்குக் கூட விசுவாசமாக இருப்பதில்லை என்கிற நியாயமான கருத்தைச் சொன்ன அவர் தொடர்ந்து பேசியதாவது :

‘ ஹீரோவுக்கு பில்ட் அப் சீன் யோசிச்சே பல படைப்பாளிகள் காணாமல் போய் விட்டார்கள். ஆனால், ஹீரோக்கள் 30 லிருந்து 100 கோடிகள் சம்பளம் வாங்க ஆரம்பித்து விடுகிறார்கள்.அவர்களது ரசிகர்கள் அவர்களுக்கு கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் தியேட்டரில் டிக்கெட் எடுக்கும் போது ஆயிரம் ஆயிரத்து ஐநூறு என்று டிக்கெட் விலை வைக்கிறார்கள்.

எப்படி அவனால் படம் பார்க்க முடியும்?

ஆக, பெரிய நடிகர்கள் அவர்களது ரசிகர்களுக்கே விசுவாசமாக இருக்க மாட்டேன் என்கிறார்கள். நல்லா சம்பாதிச்சுட்டு ரிடையர்ட் ஆகும் போது முதலமைச்சர் கனவு வேற… எந்த பெரிய நடிகராவது அரசு நிர்ணயித்த கட்டணத்தில் தான் டிக்கெட் விற்க வேண்டும், என் சம்பளத்தைக் குறைத்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார்களா? தங்களது ரசிகர்களுக்கே விசுவாசமாய் இருக்க முடியாதவர்கள் எப்படி முதல்வராகி ஒட்டு மொத்த மக்களுக்கும் விசுவாசமாய் இருப்பார்கள்…

தியேட்டர் டிக்கெட் விலை அதிகம் என்பதால் தான் தமிழ் ராக்கர்ஸில் படத்தை விடுகிறான். தமிழ் ராக்கர்ஸை பொதுமக்களும் கொண்டாடுகிறார்கள். ரசிகனுக்கும் திரையிடுவதற்குமான இடைவெளியை நாம் களைய வேண்டும். அதை விடுத்து, யார் மீதும் குற்றம் சுமத்திக் கொண்டிருப்பதில் என்ன பயன்? அவரை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்களையே காப்பாற்ற முடியாத விஷால் எப்படி தயாரிப்பாளர் சங்கத்தைக் காப்பாற்றப்போகிறார்? நல்லவேளை, இன்றைக்கு ஒருத்தர் முதல்வராகி விட்டார், இல்லாவிட்டால் விஷால், கவர்னர்ட்ட போயி நான் முதல்வராகி தமிழ்நாட்டைக் காப்பாற்றுகிறேன் என்று சொன்னாலும் சொல்வார்.

ரசிகர்கள் தயவு செய்து பெரிய நடிகர்களை நம்பாதீர்கள். புதுமுகங்கள் நடித்த நல்ல படங்களுக்கு ஆதரவு கொடுங்கள். என் எஸ் கேவிலிருந்து இன்று வரை நகைச்சுவை நடிகர்கள் தான் உங்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார்கள். அந்த வகையில் உங்களைச் சிரிக்க வைக்கும் படமாக சிரிக்க விடலாமா வை எடுத்திருக்கிறார்கள். வெற்றிபெற வாழ்த்துகள்..” என்றார்.

கே.பாக்யராஜ் பேசும் போது, ” எல்லோரும் தியேட்டருக்கு வந்து பார்ப்பதைத் தான் விரும்புகிறார்கள்… குறிப்பாக இளைஞர்கள்… தியேட்டரில் டிக்கெட் விலை கூடிவிட்டதால் குடும்பஸ்தர்களாக வந்து படம் பார்க்க இயலவில்லை என்பது உண்மைதான்… மொத்தத்தில் நல்ல படமாக எடுத்தால் ஓடத்தான் செய்கிறது…

சிரிக்க விடலாமா இயக்குநர் காவியன், எனது சிறந்த உதவியாளர்களுள் ஒருவரான காளியின் உதவியாளர். ஆகவே சிறப்பாக பணியாற்றியிருப்பார்..” என்றார்.

விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ், பவர் ஸ்டார் சீனிவாசன், இசையமைப்பாளர் எஸ் எஸ் குமரன் மற்றும் சிரிக்க விடலாமா படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

KBhagyarajpower starsrinivasanSirikka VidalamaSS. KumaranSuresh Kamatchi
Comments (0)
Add Comment