கொட்டிக் கொடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தாலும் கேட்பதிலும் ஒரு அளவு வேண்டாமா? அந்த அளவை தாண்டிப் போக ஆரம்பித்ததால் ”ரொம்ப ஓவராத்தான் போய்க்கிட்டிருக்கு..!!” என்று தயாரிப்பாளர்களே புலம்புகிற அளவுக்கு அவர்களின் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார் நயன்தாரா.
தொடர் தோல்விகளை கொடுத்து வந்த நயன்தாராவுக்கு ‘மாயா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதில் தொடங்கிய வெற்றி தொடர்ந்து ‘நானும் ரவுடி தான்’ வரை தொடர, தயாரிப்பாளர்களின் ஹிட் செண்டிமெண்ட் நாயகியானார் நயன்தாரா.
அவர் நடிக்கின்ற படங்கள் அடுத்தடுத்து ஹிட்டானதால் அந்த செண்டிமெண்ட் காரணமாக புதுப்படங்கள் அடுத்தடுத்து வந்தன. இதனை பயன்படுத்திக் கொண்ட நயன் தாரா அதற்காக கேட்கிற சம்பளம் தான் இப்போது தயாரிப்பாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதிகபட்சம் 1 கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர் ‘இருமுகன்’ படத்தில் 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார். அந்த தயாரிப்பாளர் தந்ததைப் பார்த்த நயன் இன்னும் அதிகமாகக் கேட்டுப் பார்க்கலாமே என தேடி வரும் புதுப்படங்களில் 5 கோடி வரை சம்பளம் கேட்க ஆரம்பித்திருக்கிறார்.
இதற்கும் அவர் படத்தில் நடிப்பதோடு சரி, அந்தப்படத்தின் புரமோஷன் சம்பந்தப்பட்ட எந்த வேலைகளுக்கும் வர மாட்டார். அப்படி இருக்கும் போது எதற்காக இவ்வளவு சம்பளம்? என்று யோசித்த தயாரிப்பாளர்கள் நயன்தாரா கேட்கும் சம்பளம் கட்டுப்படி ஆகாததால் அஞ்சலி, தமன்னா, சமந்தா மற்ற முன்னணி நடிகைகளை நாட ஆரம்பித்திருக்கிறார்கள் இயக்குநர்கள்.
அதானே எதுக்கும் ஒரு அளவு இருக்குல்ல…?