ஒரு படத்தை எடுத்து ரிலீஸ் செய்து அதில் கொஞ்சூண்டு லாபம் பார்ப்பதற்குள் தயாரிப்பாளர்கள் படுகிற பாட்டு சொல்லி மாளாதது.
அதிலும் விஜய் மாதிரியான மாஸ் ஹீரோக்கள் என்றால் நாலா பக்கத்திலிருந்தும் குடைச்சல்கள் வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
அதோடு விஜய் – அஜித் ரசிகர்களின் ட்விட்டர் சண்டையால் மேற்படி இரண்டு ஹீரோக்களின் படங்களுமே சில நேரங்களில் வசூலில் பாதிப்பை சந்திக்கின்றன.
அப்படித்தான் குழந்தைகளை டார்க்கெட் செய்து எடுக்கப்பட்ட விஜய் நடிப்பில் வெளியான ‘புலி’ எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. அதோடு அந்தப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதால் அந்த நஷ்டத்தை எப்படி வாங்குவது என்று காத்துக் கொண்டிருந்தனர் விநியோகஸ்தர்கள்.
அந்த பஞ்சாயத்தில் சிக்கிக் கொண்டது ஜீவா நடிப்பில் வருகிற மார்ச் 4-ம் தேதி ரிலீசாகப் போகும் ‘போக்கிரிராஜா’ திரைப்படம்.
ஆமாம், ‘புலி’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக பி.டி.செல்வக்குமார் தான் இந்தப் படத்தையும் தயாரித்திருக்கிறார். அதனாலேயே ‘புலி’ படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை தர வேண்டும். இல்லையென்றால் ‘போக்கிரி ராஜா’வை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என்று பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் எச்சரித்தனர்.
விவகாரம் தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சு வார்த்தைக்கு வர, இதில் கலந்து கொண்ட விநியோகஸ்தர்கள் தங்களுக்கு புலியில் 8 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அதை தர வேண்டும் என்று புலி தயாரிப்பாளர்களிடம் கேட்டனர். பின்னர் தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தையில் 5 கோடியாக குறைக்கப்பட்டு இறுதியாக 3 கோடி ரூபாய் நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு தருவதாக ஒருமனதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதில் ஒன்றரை கோடி ரூபாயை பி.டி.செல்வக்குமாரும், மீதி ஒன்றரை கோடி ரூபாயை இன்னொரு தயாரிப்பாளரான சிமி தமீன்ஸும் தருகிறார்களாம்.
இந்தப் பஞ்சாயத்து முடிந்ததையடுத்து வருமா? வராதா? என்கிற கேள்விக்குறியோடு காத்திருந்த ‘போக்கிரி ராஜா’ திரைப்படம் திட்டமிட்டபடி வருகிற மார்ச் 4ம் தேதி ரிலீசாகிறது.