ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’. ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி நடிக்க கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்த ஐக் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார்.
விஷால் சந்திரசேகர் இசையில் சிம்பு, அனிருத், ஜி.வி.பிரகாஷ்குமார், கங்கை அமரன், பிரேம்ஜி என ஐந்து இசையமைப்பாளர்கள் பாடியுள்ள இந்த படத்தின் இசை சத்யம் திரையரங்கில் வெளியிடப்பட்டது. ஒரு வித்தியாசமான ஹாரர் காமெடிப் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசையை உலக நாயகன் கமல்ஹாசன் தன் சீடருக்காக வந்து வெளியிட்டுக் கொடுத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் அட்லி ”இதே சத்யம் திரையரங்கில் தான் என் முதல் படம் ராஜா ராணியின் இசை வெளியீடும் நடந்தது. என் முதல் தயாரிப்பும் இந்த மேடையில் நடப்பது மகிழ்ச்சி. என் உருவத்தை பார்த்து இவன் என்ன பெருசா பண்ணிட போறான் என நினைக்காமல் ஏ.ஆர்.முருகதாஸ் சார் வாய்ப்பு கொடுத்ததால் தான் இயக்குனர் அட்லியாக இங்கு உங்கள் முன் நிற்கிறேன். நிறைய கதைகள் கேட்டு அதில் ஒரு கதையாக தான் ”சங்கிலி புங்கிலி கதவ தொற” படத்தை தேர்ந்தெடுத்தேன். நான் பேய்க்கு ரொம்ப பயந்தவன். அதனால தான் இந்த பேய் படத்தை எடுக்க நினைத்தேன் என்றார் தயாரிப்பாளரும் இயக்குனருமான அட்லி.
பின்னர் பேசிய ராதாரவியின் பேச்சில் நக்கலும், கேலியும், நையாண்டியும் தூக்கலாக இருந்தது ”இன்று நான் ஒரு வேளை கூட சாப்பிடுகிறேன் என்றால் அந்த நிலையில் இருப்பதற்கு ஹீரோ ஜீவாவின் அப்பா ஆர்.பி.சௌத்ரியும் ஒரு முக்கிய காரணம். என் மகனை சினிமாவில் வரவைக்க ஆசைப்பட்டேன். சினிமாவில் நிறைய நன்றி கெட்டவர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்தானோ என்னவோ அவனுக்கு சினிமா பிடிக்கவில்லை. அப்பா ஒரு துறையில் இருந்தால் மகனும் அதே துறைக்கு வருவது தான் இயல்பு. சரவணா ஸ்டோர்ஸ் வாரிசு விளம்பரத்துல ஆடினப்பேவே நடிக்க வருவான்னு நினைச்சேன்.
இந்தி படமாக இருந்தாலும் சரி, மொழியாக இருந்தாலும் சரி எனக்கு ஆகாது. அப்படி இந்தி படங்கள் எடுத்துக் கொண்டிருந்த பிரியதர்ஷனிடம் ஐக்கை சேர்த்து விட்டேன். பிறகு கமல்ஹாசனிடம், கமலை அழ வைத்த ஒரே படமான ”விஸ்வரூபம்” படத்தில் வேலை பார்த்தான். ஐக் கடுமையான உழைப்பாளி. இந்த படத்தை சிறப்பாக எடுத்துள்ளான்.
நான் நடிக்க வந்தப்போ இந்த ஹாலிவுட் கம்பெனி படங்கள்ல நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். அது இப்போது சாத்தியமாகியுள்ளது. அந்த எல்லா ஹாலிவுட் கம்பெனிகளும் இங்கே குப்பை கொட்டி கொண்டு இருக்கிறார்கள். சம்பள விஷயம் தொடங்கி எல்லாவற்றையும் பர்ஃபெக்டாக செய்யும் அவர்கள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் எடுக்க வேண்டும்.
என்னை வாழவைத்த பத்திரிக்கை, வாழ வைததுக் கொண்டிருக்கும் இணையதளம் எல்லாவற்றிற்கும் நன்றி. யூடியூப்ல நான் பேசுனத போட்டு என்னை இரண்டு தடவ போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பிட்டாங்க. நிறைய பேரு விழாவுக்கு வரலன்னு வருத்தப்பட்டாங்க, வாழ்த்தணும்னு வர்றவங்க மட்டும் போதும். வாழும் வரை எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். தமிழ்நாடு முழுக்க எங்கள் குடும்பத்துக்கு கிளைகளை திறந்து வைத்திருக்கிறார் எங்கள் அப்பா. அதனால் இந்த படம் பெரிய வெற்றி பெறும்” என்றார் ராதாரவி.