80-களில் ரிலீசாகி மெகா ஹிட்டடித்த ரஜினி படங்களை ரீமேக் செய்கிற வேலைகளை சமீபகாலமாக இளம் இயக்குநர்கள் பலரும் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
இன்னும் சிலர் ரஜினியின் பட டைட்டில்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இப்படி செய்யப்படும் வேலைகளால் ரஜினிக்கு சம்பந்தப்பட்ட படங்களில் கிடைத்த மாஸ் இமேஜ் டேமேஜ் ஆகிற லெவலுக்குத்தான் ரிசல்ட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் தோசைக் கரண்டியை பிடிக்கிற கை யாருடைய கை என்பது முக்கியமல்லவா?
இதோ ரஜினியின் ”மூன்றுமுகம்” படத்தை ரீமேக் செய்கிற பாக்கியம் அவரது தீவிர ரசிகரும், கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த ”காஞ்சனா – 2” படத்தை தொடர்ந்து ”மொட்ட சிவா கெட்ட சிவா”, ”சிவலிங்கா” ஆகிய படங்களில் நடித்து வரும் ராகவா லாரன்ஸுக்கு கிடைத்திருக்கிறது. ஆமாம், இந்த ”மூன்று முகம்” ரீமேக்கில் அவரே நாயகனாக நடித்து தனது ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் சார்பில் மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
ரீமேக் செய்வது உறுதியாகி விட்டாலும் படத்தை இயக்கப்போகிறவர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
”ஜிகர்தண்டா” படத்தை தயாரித்த ஸ்ரீ மீனாட்சி கிரியேசன்ஸ் எஸ்.கதிரேசன் இந்தப் படத்தயாரிப்பில் உறுதுணையாக இருக்கிறாராம். இவரிடம் தான் இந்த மூன்றுமுகம் படத்தின் ரீமேக் உரிமை இருந்து வந்தது. ரஜினியை வைத்து படம் இயக்க ஆசைப்பட்ட லாரன்ஸுக்கு அந்த ஆசை நிறைவேறாவிட்டாலும் இந்த மூன்றுமுகம் படத்தை ரீமேக் செய்கிற பாக்கியமாவது தனக்கு கிடைக்கட்டுமே என்று கதிரேசனிடம் பேசி ரீமேக் உரிமையை வாங்கி தயாரித்து நடிக்கிறார்.
ரஜினியோட மாஸ் லெவல் குறையாம பார்த்துங்கங்க ப்ரோ!