‘கபாலி’, ‘எந்திரன் 2’ என அடுத்தடுத்து படங்களை கமிட் செய்து தொடர்ச்சியாக படப்பிடிப்புகளில் கலந்து கொண்டதால் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உடனே அமெரிக்காவில் சில வாரங்கள் தங்கியிருந்து மருத்துவமும் அதைத்தொடர்ந்து ஓய்வும் எடுத்தார் ரஜினி. அதனாலேயே ‘கபாலி’ படத்தின் புரமோஷன்களில் ரஜினியால் கலந்து கொள்ள முடியாமல் போனது.
படம் ரிலீசாகி சில தினங்களிலேயே சென்னை திரும்பிய ரஜினி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் தான் இருக்கிறார். நேற்று கூட தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில் தான் ஹெல்த் செக்கப்புக்காக மீண்டும் அமெரிக்க செல்ல இருக்கிறார் ரஜினி என்கிற தகவல் கசிந்திருக்கிறது. ‘எந்திரன் 2’ படப்பிடிப்பு சென்னை ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடந்தபோது அதில் கலந்து கொண்டார் ரஜினி.
அந்த படப்பிடிப்பை முடித்த கையோடு பாடல்காட்சிகளை படம்பிடிப்பதற்காக உக்ரைன் நாட்டுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார் இயக்குநர் ஷங்கர். இந்த நேரத்தில் தான் அமெரிக்க விஜயம் செய்ய முடிவு செய்திருக்கிறார் ரஜினி.
மீண்டும் ரஜினியின் உடல் நலம் குறித்த செய்தி வெளிவந்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் கவலையை தந்திருந்தாலும், வழக்கமான ஹெல்த் செக்கப் என்பது ஆறுதல் தான். அப்படியே முழுமையான உடல்நலத்தோடு இருக்கிறார் என்கிற செய்தியும் அமெரிக்காவிலிருந்து வந்து சேர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பும்.
அப்படியே ஆகட்டும்!