ஆனந்த கண்ணீர் விட வேண்டிய சிவகார்த்திகேயன் ”நாங்க யார்கிட்டேயும் உதவி கேட்கல… எங்களை வேலை செய்ய விடுங்க அது போதும்…” என்கிற வேண்டுகோளோடு ‘ரெமோ’ வெற்றி விழா மேடையில் கண் கலங்கினார்.
மாஸ் ஹீரோ லிஸ்ட்டில் குறுகிய காலத்துக்குள் இடம் கிடைத்து விட்டாலும் அந்த வெற்றியைத் தக்க வைக்க பெரிய போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது என்று அதே மேடையில் மனம் திறந்து சில கருத்துகளையும் கூறினார்.
முன்னணி ஹீரோவுக்கே இந்த நிலைமை என்றால் மற்ற வளர்ந்து வரும் ஹீரோக்களின் நிலைமை எல்லாம் எப்படியிருக்கும் என்று நாம் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.
என்றாலும்சி இந்த விவகாரத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஆறுதல் சொல்ல முதல் ஆளாக வந்தவர் நடிகர் சிம்பு தான். ”கவலைப்படாதே சிவா, உனக்கு மட்டும் இல்லை, அவங்க யாருன்னு எனக்கும் தெரியும், அவங்க அதுலேயும் சிறந்தவங்க. கடின உழைப்பு தான் வெற்றியைத் தரும். மிச்சத்தை கடவுள்கிட்ட கொடுத்து விடு” என்று ட்விட்டர் மூலமாக ஆறுதல் சொன்னார்.
தொடர்ந்து நடிகர் சங்கச் செயலாளர் விஷாலும் சிவகார்த்திகேயன் மேடையில் அழுதது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சரி இவர்கள் மட்டும் தான் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக வந்தார்களா என்றால் இல்லை.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளைய தளபதி விஜய் ஆகியோரும் சிவகார்த்திகேயனுக்கு போன் செய்து தனிப்பட்ட முறையில் அறிவுரை வழங்கி ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள். மற்றவர்கள் வந்தார்களோ இல்லையோ சூப்பர் ஸ்டாரும், இளைய தளபதியும் அடுத்தடுத்து போன் செய்து ஆறுதல் கூறி தன் பக்கம் ஆதரவாக வந்து நின்றதில் சிவகார்த்திகேயன் நிஜமாகவே நெகிழ்ந்து விட்டார்.
நெகிழ்ச்சி மகிழ்ச்சியாக தொடரட்டும்!