நான்கு சுவற்றுக்குள் மிக எளிமையாக பூஜை போட்டு ஆரம்பிக்கப்பட்ட சிவகார்த்திகேயனின் ”ரெமோ” திரைப்படம் இப்போது பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது.
அப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் ட்ராக் வெளியீட்டு விழாவில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், ‘தனி ஒருவன்’ இயக்குநர் மோகன் ராஜா என பல பிரபலங்கள் கலந்து கொண்டாலும் தந்தி டிவியில் சீப் நியூட் எடிட்டரும், ‘கேள்விக்கு என்ன பதில்’ என்று தனது பொறிக்கேள்விகளால் அரசியல்வாதிகளை தெறிக்க விடும் ரங்கராஜ் பாண்டே கலந்து கொண்டது தான் விழாவுக்கு வந்திருந்தவர்களை ஆச்சரியப்படுத்தியது.
படத்தின் புரமோஷனுக்காக தந்தி டிவியுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிற விஷயத்தை பின்னர் பாண்டேவே சொன்னார்.
நிகழ்ச்சியில் பேசிய பாண்டே தெளிவான தமிழ் உச்சரிப்பில் நகைச்சுவை இழையோட பேசினார்…
”சமீபத்தில் தான் இந்தப் படத்தோட தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா எனக்கு அறிமுகமானார். ஒரு நல்ல இதயம் உள்ளவர். அந்த நல்ல இதயத்துக்காவே இந்தப்படம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.
விழாவில் கலந்து கொண்ட டைரக்டர் ஷங்கர் சார் மாதிரி, ஏ.வி.எம் சரவணன் சார் மாதிரி பெரிய பெரிய வெற்றிகளை கொடுத்து முன்னுதாரணமாக இருக்கக் கூடியவர்களின் ஆசீர்வாதம் அவருக்கு இருக்கும்.
சிவகார்த்திகேயன் என்னோட அருமை சகோதரர். அவருடைய ஒவ்வொரு வெற்றியிலும் நான் என்னைப் பார்க்கிறேன். நானே ஜெயிச்ச மாதிரி உணர்கிறேன். என்னுடைய 16 வயசுல சச்சின் டெண்டுல்கர் இண்டர்நேஷனல் கிரிக்கெட்ல ஜெயிச்சப்போ நம்மளோட சம வயசுக்காரன் இவ்வளவு பெரிய உயரத்தை தொட்டுருக்கிறான். நாம எங்க இருக்கோம்னு அழுதேன். அதன்பிறகு கடுமையாக போராடி போராடி என்னால இந்த அளவுக்குத்தான் வளர முடிஞ்சது. இன்னும் எனக்கு நெறைய போராட்டம் தேவைப்படுது.
சிவகார்த்திகேயன் ஒரு நல்ல மனிதன், ஒரு நல்ல உழைப்பாளி, ஒரு நல்ல திறமையான மனிதன். எந்த ஒரு சர்ச்சைக்கும் உள்ளாகாமல் முழுக்க முழுக்க தன்னுடைய வெற்றியும், தொழிலில் மட்டுமே கவனம் கொண்டிருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஒட்டு மொத்த திரையுலகத்துக்கு மட்டுமில்லாமல் தமிழகத்துக்கே அடையாளமாக இருக்கிறார்.
கீர்த்தி சுரேஷோட சிவகார்த்திகேயனுக்கு இது ரெண்டாவது படம்னு நெனைக்கிறேன். இதுவரைக்கும் கிசுகிசுவில் அதிகமா சிக்காத ஒரு சகோதரன். அதற்கான வாய்ப்புகள் மிக சமீபத்தில் நெருங்கியிருப்பதாக அறிகிறேன். அதனால் அதிகமான கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டிய நிலைமையை நான் புரிஞ்சிக்கிறேன்.” என்றார் சிரித்துக் கொண்டே…
கேட்டுக்கங்க சிவகார்த்திகேயன்!