ஒரு கிளாஸ் டீயை கேனில் இருந்து ஊற்றிக் கொடுக்க இரண்டு பேரை வேலைக்கு வைத்து அவர்களுக்கு தலா 2000 ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டும்.
இதுதான் காலம் காலமாக தமிழ்ப்பட தயாரிப்பாளர்களின் பரிதாப நிலை, மீறி நீங்களே ஊற்றிக் குடிக்க நினைத்தால் இடையில் வந்து தடுத்து நிறுத்துவார்கள் பெப்ஸி தொழிலாளர்கள்.
உலகத்திலேயே தான் பார்க்கிற வேலைக்கு முதலாளி எவ்வளவு சம்பளம் தர வேண்டும் என்று தீர்மானிக்கிற நியாயமில்லாத வேலைகள் தொடர்ந்து நடப்பது தமிழ்சினிமாவில் தான்.
நாயகியே எனக்கு உதவியாளர்கள் தேவையில்லை என்று சொன்னாலும் ”இல்லை நீங்க வெச்சுத்தான் ஆகணும்” என்று வந்து மல்லுக்கட்டி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆட்கள் வம்படியாக வேலைக்கு அமர்த்தப்படுவார்கள். அவர்களுக்கான சம்பளத்தை பேட்டாவுடன் அந்தப்படத்தின் தயாரிப்பாளர் அழ வேண்டும்.
இப்படி தயாரிப்பாளர்கள் தலையில் மிளகாய் மூட்டைகளை அரைக்கும் பெப்ஸி தொழிலாளர்களின் அடாவடிகளை கண்டு எரிச்சல் அடைந்தவர் போல பேசினார் ஆர்.ஜே.பாலாஜி.
கெளதம் கார்த்திக்குடன் அவர் இணைந்து நடித்த இவன் ”தந்திரன்” இன்று மறு வெளியீடு ஆகியிருக்கிறது.
”இவன் தந்திரன்” படம் பொருளாதார ரீதியில நெறைய கஷ்டங்களுக்கு நடுவுல எடுக்கப்பட்டது. டைரக்டர் கண்ணன் தான் இந்தப்படத்தையும் தயாரிச்சிருக்கார். ஒவ்வொரு நாள் ஷூட்டிங்கையும் நடத்துறதுக்கு அன்னைக்கு மதியம் ரெண்டு மணிக்குத்தான் பணத்தையே ரெடி பண்ணுவார்.
இந்தப்படம் தப்பாவே இல்லை. ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. ரிலீசான முதல் மூணு நாட்கள் எல்லா இடத்திலேர்ந்தும் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்துச்சு. ஆனால் திங்கட்கிழமையில இருந்து படம் தியேட்டர்ல இல்லேன்னு கேள்விப்பட்டப்போ கஷ்டமாப்போச்சு.
நான் சினிமாவுக்கு வந்து நாலைஞ்சு வருஷம் தான் ஆச்சு. 15 படங்கள் தான் நடிச்சிருக்கேன். அப்படிப்பட்ட நான் பார்க்கும் போதே சினிமாவுல அவ்ளோ பிரச்சனைகள் இருக்கு. இங்க இருக்கிற திறமைக்கு எல்லாமே சூப்பரா நடக்கலாம். ஆனா அப்படி நடக்கல…
எனக்குத் தெரிஞ்ச ஒரு தயாரிப்பாளர் அவரோட படத்துக்கு மொட்டை ராஜேந்திரனை வெச்சு ஷூட் பண்ணிக்கிட்டிருந்தார். அங்க மொட்டை ராஜேந்திரன் பக்கத்துல ஒரு ஹேர் டிரெஸ்சர் இருக்காங்க. எதுக்குன்னு கேட்டா யூனியன் ரூல்ஸ்படி ஒரு ஹேர் ட்ரஸ்சர் இருக்கணும்னு சொன்னாங்க அதனாலதான்னு அந்தத் தயாரிப்பாளர் சொன்னார். மொட்டை ராஜேந்திரனுக்கு எதுக்கு ஹேர் ட்ரெஸ்ஸர்?
ஒரு ஹீரோயினை வெச்சு படம் எடுக்கும் போது அதுபெரிய ஹீரோயின்னா இருந்தா அவங்க கூட இருக்கிற 8 அசிஸ்டெண்ட்டுகளுக்கு தயாரிப்பாளர் தான் சம்பளம் கொடுக்கணும். ஒரு நாளைக்கு மினிமம் 50 ஆயிரம் ரூபாய் வேணும், அந்த ஹீரோயின் 30 நாள் அந்தப் படத்துல நடிச்சாங்கன்னா எவ்ளோ பணம் கொடுக்க வேண்டியிருக்குன்னு பாருங்க? இதெல்லாம் நான் சினிமாவுல பார்க்கிற ஒரு சில சின்னச் சின்ன விஷயங்கள் தான்.
நான் நடிக்கிற ஒரு படத்துல 100 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் நடிக்கிறாங்க. தயாரிப்பாளர் கொடுக்கிற சம்பளப்பணத்துல பாதிதான் அவங்களுக்குப் போகும், மீதியை நடுவுல சிலபேர் கமிஷனா எடுத்துக்குறாங்க. இந்தமாதிரி கண்ணுக்கு முன்னால பளிச்சின்னு தெரியிற சின்னச் சின்னப் பிரச்சனைகளை சரி பண்ணினாலே தமிழ்சினிமா நல்லாயிருக்கும் என்றார் பாலாஜி.
இதெல்லாம் தெரிஞ்சும் பல வருஷமா சும்மாத்தானே இருக்கு தமிழ்சினிமா உலகம்!