குழந்தைகள் சரியாக இருக்கிறார்கள்; பெற்றோர்கள் தான் தவறு செய்கிறார்கள்! : சாட்டையை சுழட்டும் சமுத்திரக்கனி!

முத்திரக்கனி படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு எப்போதும் கிளம்பி விடும். அவர் படங்களில் இருக்கிற வாழ்க்கையின் யதார்த்தம் தான் அந்த எதிர்பார்ப்புக்கு காரணம்.

”நிமிர்ந்து நில்” படத்தைத் தொடர்ந்து இப்போது தானே தயாரிப்பாளராகி, கதையின் நாயகனாகவும் நடித்து ‘அப்பா’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

வருகிற ஜூலை 1-ம் தேதி ரிலீசாகப் போகும் இப்படத்தைப் பற்றி சமுத்திரக்கனியே பேசினார்…

இந்தக் கதையை நான் முதலில் படமாக எடுக்க நினைத்தவுடன் யாரிடமும் செல்ல விரும்பவில்லை. ஏனென்றால் அவர்கள் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு குத்துப்பாட்டெல்லாம் வைக்கச்சொல்லி விட்டால் கதையின் ஜீவன் போய் விடுமே என்கிற அச்சம் தான். அதனால் நானே தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். என்னிடம் கொஞ்சம் பணம் இருந்தது. கூடவே எனது நண்பனும் வந்தான். எடுத்து விட்டோம். நான் நினைத்தபடி படம் வந்திருக்கிறது.

இது ஒரு அப்பாவைப் பற்றி பேசும் படம் இல்லை. நான்கு விதமான குணாதிசயங்கள் கொண்ட அப்பாக்களைப் பற்றி இதில் சொல்லியிருக்கிறேன்.

பையனின் ஆசை, ஏக்கங்கள் என்ன என்பதை அவனுக்குத் தெரியாமலேயே அறிந்து, நிறைவேற்றும் ஒரு அப்பா, அம்மாவின் கருவறைக்குள் இருக்கும் குழந்தை பிறந்ததில் இருந்து திருமணம் வரை இப்படி எல்லாம் செய்ய வேண்டும், படிக்க வேண்டும் என்று திட்டமிடும் ஒரு அப்பா, ‘உனக்கு என்ன தோணுதோ பண்ணுடா மகனே’ என்று வளர்க்கும் ஒரு அப்பா, எதையுமே கண்டு கொள்ளாமல் இருக்கும் அப்பா என நான்கு விதமான அப்பாக்களை காட்டியிருக்கிறேன்.

நம் சமூகத்தில் குழந்தைகள் மீது தவறே சொல்ல முடியாது. அப்பாக்கள் மீதும் கல்வி முறை மீதும் தான் குறை இருக்கிறது.

பொதுத் தேர்வில் 1040 மதிப்பெண்கள் எடுத்த தைரியலட்சுமி என்ற மாணவியின் தற்கொலை என்னை மிகவும் பாதித்தது. அதிலிருந்து கிட்டதட்ட 3 நாட்களுக்கு என்னால் வெளியே வர இயலவில்லை. அப்போது என்னுடைய உதவியாளர்களை அழைத்து ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று ஆய்வு செய்யச் சொன்னேன். அப்போது நிறைய தகவல்களைச் சொன்னார்கள்.

கல்வியைப் பொறுத்தவரையில் உலகத்திலேயே அதிகமாக இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நாடு இந்தியா. அதிலும் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு தான் இதில் முதலிடம் என்கிற பெருமை வேறு.

இந்த விஷயம் என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. உடனே பேப்பர்களில் குழந்தைகளைப் பற்றி வரும் செய்திகளைச் சேகரிக்க ஆரம்பித்தேன். சுமார் 4 வருடங்கள் செய்திகளை வைத்து பின்னப்பட்ட திரைக்கதைத் தான் இந்தப் படம்.

கண்டிப்பாக இந்தப்படம் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்கிற படமாக இருக்காது. கமர்ஷியலாகவும், சொல்ல வேண்டிய செய்தியை நாசுக்காக சொல்லும் விதமாகவும் இருக்கும்.

படத்தில் பாடல் இல்லை. ஒரே ஒரு பாடல் மட்டும் இளையராஜா சார் வைத்தால் என்ன என்று கேட்டார். நானும் சம்மதம் சொல்லி விட்டேன். அதுவரை நான் எடுத்த படம் ஒரு மாதிரி இருந்தது. இளையராஜா இசையமைத்த பிறகு பார்த்த போது வேறு மாதிரியாக இருந்தது. இந்தப்படத்தில் அவருடைய பின்னணி இசை மிகவும் முக்கிய பங்காற்றியிருக்கிறது என்றவர் படத்தை பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு அனுப்பும் வேலைகளை செய்து வருகிறேன்” என்றார்.

AppaAppa MovieSamuthirakaniஅப்பாசமுத்திரகனி
Comments (0)
Add Comment