ஒரு வழியாக சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ படம் ரிலீசாகி விட்டது.
கலவையான விமர்சனங்களோடு ஓடிக்கொண்டிருக்கும் இந்தப்படம் யாருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ சிம்பு ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது.
ஆனால் ஒரு ஹீரோ எல்லோருக்கும் பிடித்தமான படத்தில் நடிக்கவே விரும்புவார். அப்போது தான் போட்ட முதலீட்டை திரும்ப எடுக்க முடியும். குறிப்பாக பெண்கள் குழந்தைகளை தியேட்டர்களுக்கு வர வைக்கும் விதமான ஜனரஞ்சக படங்களில் விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.
அவர்கள் இப்படி யோசிக்க, சிம்புவோ தனது புதுப்படம் ஒன்றை பெண்களும், குறிப்பாக குழந்தைகள் பார்க்கவே வர வேண்டாம் என்று எச்சரித்திருக்கிறார்.
த்ரிஷா இல்லன்னா நயன் தாரா படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்துக்கு அன்பானவன் அசரதவன் அடங்காதவன் என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.
சுருக்கமாக இந்தப்படத்தை AAA என்று அழைப்பார்களாம். ( அடக்கருமமே…)
இந்தப் படத்தை தான் தான் பெண்களும், குழந்தைகளும் பார்க்க வர வேண்டாம் என்று படம் தயாராவதற்கு முன்பே கருத்து சொல்லியிருக்கிறார் சிம்பு.
ஆமாம், இது இளைஞர்களை குறி வைத்து எடுக்கப்படும் படம், அதனால் தான் இதை இப்படத்தை கண்டிப்பாக பெண்கள், குழந்தைகள் இந்த படத்தை பார்க்க வேண்டாம் என கூறியதாகச் சொல்கிறார் சிம்பு.
கெளதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ படம் ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்க, இப்போது புதிதாக கமிட்டாகியிருக்கும் இந்த ‘AAA’ படப்பிடிப்பு தான் வேகமெடுத்திருக்கிறது. ஆக சிம்புவின் அடுத்த படமாக இந்தப்படம் தான் ரிலீசாகும் என்கிறார்கள். எப்படி இருந்தாலும் சிம்பு படமெல்லாம் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸ் ஆனாலே பெரிய விஷயம் தான்.