குறிஞ்சிப் பூ போல சில சம்பவங்களை பார்க்கும் போது நமக்கே அது ஆச்சரியத்தைக் கொடுக்கும்!
அப்படி ஒரு ஆச்சரியம் தான் இன்று காலை இன்று காலை சென்னையில் நடைபெற்ற ‘முடிஞ்சா இவன புடி’ படத்தின் ஆடியோ பங்ஷனில் நடந்தேறியது.
எப்போது தனுஷ் விஜய் சேதுபதியை வைத்து ‘நானும் ரவுடி தான்’ படத்துக்கு பூஜை போட்டாரோ அன்றிலிருந்து தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி மூவருக்குள்ளும் பேச்சு வார்த்தை இல்லை என்று மீடியாக்களால் வெளிப்படையாகவே பேசப்பட்டது. அந்தப் பிரிவு இன்று வரை தொடர்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி மூவரையும் ரே மேடையில் அடுத்தடுத்த இருக்கைகளில் பார்த்தது ரசிகர்களுக்கு மட்டுமல்ல அங்கு குவிந்திருந்த மீடியாக்களுக்கும் குறிஞ்சுப் பூ போன்ற ஆச்சரியம் தான்.
விழாவில் முன்னதாக பேசிய இயக்குநர் பி.வாசு ”தமிழ்சினிமாவின் இளம் முன்னணி ஹீரோக்கள் மூன்று பேரையும் ஒரே மேடையில் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய வால்டர் வெற்றிவேல் படத்தின் வெற்றி விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ் மூவரும் ஒரே மேடையில் இருந்தாங்க. அதே மாதிரி இந்த விழாவில் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி மூவரையும் நான் பார்க்கிறேன்” என்றார்.
விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் ”கே.எஸ்.ரவிகுமார் சார் என்னோட ‘ரெமோ’ படத்துல நடிச்சாங்க. ஒருநாள் ஷூட்டிங்குக்கு வந்துட்டு அவரோட காட்சிகள் முடிஞ்சதும் சம்பளம் கொடுத்தப்ப வாங்கிக்க மாட்டேன்னு சொல்லிட்டார். ஏன்னு கேட்டப்போ நான் வெறும் ஒன்றரை மணி நேரம் தான் நடிச்சேன். அதுக்கு எதுக்கு சம்பளம் தர்றீங்க?ன்னு சொன்னார்.
அப்புறம் தயாரிப்பாளர் ரொம்ப சொல்லி கேட்டதால அப்போ பாதி சம்பளம் மட்டும் குடுங்கன்னு சொல்லிட்டு மீதி காசை திருப்பி கொடுத்துட்டார். அப்படி ஒரு நல்ல மனிதர் அவர். அவரைப்பற்றி வெளியில இப்படிப் பேசணும்கிறதுக்காக அவர் அப்படி செய்யல. அதெல்லாம் அவரோட இயல்பான குணங்கள்ல இருந்த ஒண்ணு தான்.
என்றவரின் பேச்சு தனுஷ் பக்கம் திரும்பியது… ”தனுஷ் சார் தான் எனக்கு முக்கியமான ஆளாக, பக்கபலமா ரொம்ப தோள் கொடுத்து சப்போர்ட் பண்ணினவர். அப்படிப்பட்ட அவரோட இந்த விழாவுல கலந்துகிட்டதுல ரொம்ப சந்தோஷம். அதோட ரொம்ப நாள் கழிச்சி அவரை இங்க மீட் பண்றேன். உங்களை மீட் பண்ணினதுல ரொம்ப சந்தோஷம் தனுஷ் சார்… என்றார் சிவகார்த்திகேயன்.
இந்த சந்தோஷம் உண்மையாக இருக்கட்டும்!