ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நேற்று சென்னையில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.
விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினாலும் சிவகார்த்திகேயனின் பேச்சு தான் ஹைலைட்டாக அமைந்தது.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது… ”தனி ஒருவன் ரிலீஸுக்கு பிறகு படத்தை இரண்டு முறை பார்த்து, மோகன் ராஜா சாரிடம் போனில் அழைத்து படத்தை பற்றி சிலாகித்து பேசினேன். அவரோடு ஒரு படம் பண்ணனும்னு நானே அவரிடம் தயக்கத்தை விட்டு கேட்டேன். இதுவரை அவர் ரீமேக் படம் தான் பன்ணாருனு கிண்டல் பண்றாங்க. ரீமேக் படம் பண்றது சாதாரண விஷயம் அல்ல. எனக்கும் கூட பத்து ரீமேக் பட வாய்ப்புகள் வந்தன, ரொம்ப கஷ்டம் என்பதால் அதை மறுத்து விட்டேன்.
வேலைக்காரன் தலைவர் டைட்டில். அதை வைப்பதா? என முதலில் யோசித்தேன். படத்துக்கு பொருத்தமான தலைப்புனு ராஜா சார் சொன்னதால் வைத்தோம். அதை படம் பார்த்தால் உணர்வீர்கள். வேலைக்காரன் தலைப்பை கவிதாலயாவிடம் இருந்து வாங்கி தன் படத்துக்கு வைத்திருந்தார் விஜய் வசந்த். இந்த படத்துக்கு கேட்டதும் பெருந்தன்மையோடு கொடுத்தார். ஃபகத் பாஸில் இந்த படத்தில் நடித்தது எங்களுக்கு கிடைத்த ஒரு அதிர்ஷ்டம். அவர் ஒரு சர்வதேச நடிகர். அவரின் நடிப்பை பக்கத்தில் இருந்து பார்த்து, ரசித்து, பயந்து நடித்ததால் தான் நானும் ஓரளவுக்கு நடிக்க முடிந்தது.
ஏகன் பட ஷூட்டிங்கில் தான் முதன் முதலில் நயன்தாராவை நான் பார்த்தேன். அதன் பிறகு எதிர்நீச்சல் படத்துக்கு சம்பளம் கூட வாங்காமல் நடித்து கொடுத்தார். அதன் பிறகு வேலைக்காரன் ஷூட்டிங்கில் தான் அவரை சந்தித்தேன். அவரின் தன்னம்பிக்கை தான் அவருக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கியிருக்கிறது. பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருக்கிறது. இந்த படத்துக்கு கேரவன் கிடையாது, ஒன்றாக அனைவரும் ஒரே இடத்தில் உட்கார்ந்து பேசுவோம். அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். ராம்ஜி மிகவும் கஷ்டமான படங்களையே தேர்ந்தெடுத்து தான் செய்பவர். முத்துராஜ் சாரின் உழைப்பை படம் பார்க்கும்போது நீங்கள் உணர்வீர்கள்.
அனிருத் இல்லைன்னா சிவகார்த்திகேயன் இல்லைனு ட்விட்டரில் பலரும் சொல்வார்கள். அது உண்மை, அதை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரசிகர்கள் எனக்கு நிறைய கொடுத்திருக்கிறீங்க, அதை எப்படி திருப்பி கொடுப்பேன்னு தெரியல. ரசிகர்களுக்கு நான் கொடுக்கும் பரிசு இந்த வேலைக்காரன். நான் விளம்பரங்களில் நடிப்பதில்லை, இந்த படத்தில் நடித்த பிறகு விளம்பரங்களில் இனி நடிக்கவே மாட்டேன் என முடிவெடுத்திருக்கிறேன். 9 படம் பொழுதுபோக்குக்கு நடித்தால், ஒரு படம் மக்களுக்கு அறிவை புகட்டும் படமாக இருக்கும். முழுக்க கதையை நம்பி மட்டுமே எடுக்கப்பட்ட படம்” என்றார் சிவகார்த்திகேயன்.
விழாவில் ரோபோ ஷங்கர், சதீஷ், ஆர் ஜே பாலாஜி, காளி வெங்கட், மன்சூர் அலிகான், விஜய் வசந்த், கலை இயக்குனர் முத்துராஜ், ஒளிப்பதிவாளர் ராம்ஜி, தயாரிப்பாளர் ஆர் டி ராஜா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.
அதோடு 7 வேலைக்காரர்களை தேர்வு செய்து அவர்களை மேடைக்கு அழைத்து அவர்கள் முன்னிலையில் வேலைக்காரன் படத்தின் இசை வெளியிடப்பட்டது. முன்னதாக அனிருத்தின் லைவ் பெர்ஃபார்மென்ஸ் மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நவீன் மிமிக்ரி, ராஜ்மோகன் பேச்சு, லேசர் ஒளி அலங்காரம் என விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது. விஜய் டிவி திவ்யதர்ஷினி மற்றும் ஆர் ஜே விக்னேஷ் விழாவை தொகுத்து வழங்கினர்.