இசைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
15 இந்திய மொழிகளில் சுமார் 40க்கும் அதிகமான பாடல்களை பாடிவிட்ட இந்த பெருஞ்சாதனையின் சந்தோஷத்தை அந்தச் சாதனைக்கு உடனிருந்தவர்களையும் அருகில் வைத்து பெருமைப்படுத்துவது எத்தனை கொடுப்பினை?
அந்தக் கொடுப்பினையை நேற்று முழுமையாகப் பெற்று மகிழ்ந்தார் எஸ்.பி.பி.
அதிலும் தனக்கு குருநாதர் ஸ்தானத்தில் இருக்கும் காந்தர்வக் குரலுக்கு சொந்தக்காரர் கே.ஜே.யேசுதாஸுக்கு பாதபூஜை செய்து தனது குருவுக்கு மரியாதை செய்து நெகிழ்வோடு கொண்டாடினார். அவரை மட்டுமல்ல பாடிய பாடலை பதிவு செய்த ரெக்கார்டிஸ் வரை ஞாபகத்தில் வைத்து நன்றி தெரிவித்தார்.
‘சாந்தி நிலையம்’ படத்தில் ‘இயற்கை என்னும் இளையக் கன்னி’ பாடலைப் பாட வாய்ப்பு கொடுத்தார் என் தந்தைக்கும் மேலான மெல்லிசை மன்னர் எம்.எஸ் வி அவர்கள். எங்கள் அண்ணா காந்தர்வக் குரல் கே.ஜே.யேசுதாஸ் அவர்களோட ஆசீர்வாதத்தை வாங்கணும்னு ஆசைப்பட்டு இந்த விழாவுக்கு கூப்பிட்டேன். நேர்ல வர வேண்டாம், நானே வந்திடுறேன்னு சொல்லி வந்தார் என்ற எஸ்.பி.பி இவன் மட்டும் அன்று என்னை ஸ்டூடியோவுக்குள் கூட்டிச்செல்லவில்லை என்றால் இன்றைக்கு நான் உங்கள் முன் பாடகராக இருந்திருப்பது சந்தேகம் தான் என்று தனது நண்பரையும் மேடைக்கேற்றி தான் பாடகராக அறிமுகமாக சம்பவத்தையும் பகிர்ந்து கொண்டார்.
இவன் என்னோட நண்பன் முரளி. இவனோட விஜயா கார்டன்ல இருக்கிற ரெக்கார்டிங் ஸ்டூடியோவுல ஒரு பாடலைப்பாட நான் போனேன். அங்க இருந்த ஒரு மலையாளி செக்யூரிட்டி எங்க ரெண்டு பேரையும் உள்ள விடல.
நாங்க கார்ல போகாம சைக்கிள்ல தான் போனோம். இவன் என்னோட நண்பன். இங்க பாட வந்திருக்கிறார். கார் இல்லை சைக்கிள்ல தான் வந்தோம்னு சொன்னதும் செக்யூரிட்டி என்ன பொய் சொல்லிட்டு ஸ்டூடியோவை சுத்திப்பார்க்க வர்றீங்களான்னு உள்ள விடல.
2 மணிக்கு ரெக்கார்டிங், என்ன பண்றதுன்னே தெரியல. செக்யூரிட்டி அவமானப்படுத்தியதைப் பார்த்து எனக்கு பாடப்போகவே மனசில்லை. ஆனால் இவன் தான் கொஞ்சம் இருடான்னு சொல்லி நாங்க வந்த ரெண்டு சைக்கிளையும் இவனையும் இங்க விட்டுட்டு புரொடக்ஷன்ல இருந்து யாரையாவது கூட்டிட்டு வர்றேன்னு கேட்டார்.
செக்யூரிட்டி கொஞ்சம் மனசு இறங்கி சரி போ, போன உடனே வந்துடணும், அங்க ஷூட்டிங்கெல்லாம் பார்க்கக்கூடாதுன்னு சொன்னார். அதுக்கப்புறம் தான் அந்தப்பாடலை நான் பாடினேன்.
அந்த இடத்துல அந்த நேரத்துல இவன் மட்டும் இல்லேன்னா நான் ஒரு பாடகராக உங்க முன்னாடி நிற்கவே முடியாது. என்ற எஸ்.பி.பி நன்றிடா முரளி என்று கையைப் பிடித்து அன்போடு நன்றி சொன்னார்.
இசைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி திரையுலக பிரபலங்கள் பலரும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
அப்பாவின் இந்த 50 ஆண்டுகள் சாதனையைக் கொண்டாடும் விதமாக அவருடைய மகனும், பின்னணிப் பாடகருமான எஸ்.பி.பி சரண் தனது கேப்பிடல் பிலிம் ஒர்கஸ் சார்பில் “எஸ்.பி.பி 50” என்ற மாபெரும் இசை நிகழ்ச்ச்சியை பல்வேறு நாடுகளில் நடத்துகிறார்.