‘தர்மதுரை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ‘கண்ணே கலைமானே’ படத்தில் டைரக்டர் சீனு ராமசாமியோடு இணைந்திருக்கிறார் தமன்னா.
மனிதர்களின் உணர்வுகளை சமுதாய பொறுப்போடு அழகாக கோர்த்துத் தருவதில் கெட்டிக்காரரான சீனு ராமசாமியின் இப்படத்தில் ஹீரோவாக உதயநிதி நடிக்கிறார். தனது ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்பில் உதயநிதியே தயாரிக்கிறார்.
இப்படத்துக்காக சமீபத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்த தமன்னா படப்பிடிப்பு அனுபவம் பற்றிப் பேசுகையில் உதயநிதியை பாராட்டித் தள்ளினார் என்பது தான் ஹைலைட்.
”டைரக்டர் இயக்குனர் சீனு ராமசாமி நடிகர், நடிகைகளிடம் அதிகம் பேசாமலேயே அவர்களது கதாபாத்திரத்தையும், தனக்கு என்ன வேண்டும் என்பதையும் மிக சிறப்பாக விளக்கி, வேலை வாங்கி விடுபவர். அப்படிப்பட்டவருடன் ‘தர்மதுரை’ படத்திற்கு பிறகு மீண்டும் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த படத்தில் ஹீரோ உதயநிதி அவர்களின் கதாபாத்திரத்தையும் நடிப்பையும் தமிழ்சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசித்து கொண்டாடுவார்கள். அவ்வளவு சிறப்பாக அவர் நடித்துள்ளார். அப்படிப்பட்ட இந்த ‘கண்ணே கலைமானே’ படத்தின் ஒரு அங்கமாக நானும் இருப்பதில் பெருமை அடைகிறேன்” என்கிறார் தமன்னா.