சென்னை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் உள்ள எல்லா மால்களிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கடைகள் இருக்குமோ? இல்லையோ? ஆனால் கண்டிப்பாக தியேட்டர்கள் இருக்கும். ஏனென்றால் பொழுது போக்குக்காக மால்களுக்கு படையெடுக்கும் மக்கள் மால்களை சுற்றி வருவதோடு நின்று விடாமல் தங்களுக்கு பிடித்தமான படங்களையும் அங்குள்ள தியேட்டர்களில் பார்த்து ரசிப்பதையும் வாடிக்கையாக்கிக் கொண்டுள்ளார்கள்.
சொல்லப் போனால் மால்களில் செயல்படுகிற கடைகளில் இருந்து கிடைக்கிற வருமானத்தை விட, அங்கு இயங்கும் தியேட்டர்கள் மூலமாக கிடைக்கும் வருமானம் தான் அதிகம்.
அதனால் தான் சென்னை உட்பட மெட்ரோ நகரங்களில் இருக்கின்ற அத்தனை மால்களிலும் மல்டிபிளெக்ஸ் தியேட்டர்கள் கண்டிப்பாக இருக்கும். இப்படி முழுக்க முழுக்க தியேட்டர்களின் வருமானத்தையே பெரிதாக நம்பி செயல்பட்டிருக்கும் தமிழ்நாட்டின் மால் தியேட்டர்கள் கடந்த இரண்டு நாட்களாக மூடிக்கிடக்கின்றன.
ஒரு பக்கம் திருட்டு வி.சி.டி மற்றும் அதிகப்படியான கட்டணங்கள் காரணமாக தியேட்டர்களுக்கு படம் பார்க்க வரும் ரசிகர்களின் கூட்டம் குறைந்து கொண்டே வருவது சினிமாவுக்கு பெருத்த சோதனையாக இருக்கிறது என்கிற கருத்து பரவலாக இருந்தாலும் உண்மை நிலவரம் வேறு மாதிரியாக இருக்கிறது.
மூன்றாவது நாளாக இன்றும் தொடரும் திரையரங்குகளின் வேலை நிறுத்தம் காரணமாக தியேட்டர்களில் இருக்கும் மால்களின் வருமானம் பெரிய அளவுக்கு குறைந்திருக்கிறது. இந்த மாற்றம் தியேட்டர்கள் மூடப்பட்ட முதல் நாளே தெரிய ஆரம்பித்திருக்கிறது.
இது குறித்து தயாரிப்பாளரும், இயக்குநருமான கஸாலி கூறியிருப்பதாவது :
”இன்று திரையரங்கங்கள் மூடப்பட்ட மால்கள் எப்படியிருக்கின்றன அல்லது இயங்குகின்றன என்று தெரிந்து கொள்ள ஆவல். எனது ஆபீஸுக்கு மிக அருகிலிருப்பது “பலாஸோ” தியேட்டர்களை கொண்டுள்ள “ஃபோரம் மால்”. சுமார் ஆறு மணியளவில் அங்கு சென்றேன். அங்கு வேலை செய்யும் பல நிலைகளில் உள்ளவர்களிடம் கேசுவலாகப் பேச்சுக் கொடுத்து விசாரித்தேன்.
கீழ்க்காணுபவை எனது சர்வேயில் கிடைத்த தகவல்கள் :
# மொத்தம் ஒன்பது தியேட்டர்களும் மூடப்பட்டதால் டிக்கெட் மூலம் அவர்கள் பங்கு வருமானம் இழப்பு… ரூ. 3,75,000/-
# கேண்ட்டீன் மூலம் குறைந்தபட்ச வருமான இழப்பு… ரூ. 2,15,000/-
# கார் மற்றும் பைக் பார்க்கிங் மூலம் வருமான இழப்பு… ரூ. 4,40,000/-
# ஆக மொத்தம் ஒரு நாளைய வருமான இழப்பு… ரூபாய் பத்து லட்சத்துக்கும் மேல். இதில் தயாரிப்பாளர் பங்கைச் சேர்க்கவில்லை.
# தியேட்டர் மூடப்பட்டதால் மூன்றாவது மாடியில் “ஃபுட் கோர்ட்” வியாபாரம் ஏறக்குறைய 50% குறைந்துள்ளது.
# மற்ற கடைகளுக்கு வரும் கூட்டம் 30 – 40% குறைந்துள்ளது.
# அண்டர்கிரவுண்டில் “ஸ்பார்” சூப்பர் மார்க்கெட்டுக்கு வரும் கூட்டம் 20 – 30% குறைந்துள்ளது.
# ஒருவேளை தியேட்டர் ஸ்டிரைக் ஒரு மாதம் நீடித்தால் நிறைய கடைகள், ஃபுட் கோர்ட், இன்னபிற மூடப்படும் நிலை வந்துவிடும் என்று ஒருவர் பயத்தோடு கூறினார்.
மொத்தத்தில் ஆளில்லாத டீக்கடையில் ஆத்தி வைத்த டீக்கு ஆளில்லாமல் தவிக்கும் நிலைதான் தியேட்டர்கள் மூடப்பட்ட மால்களின் நிலை!