இந்த படத்தில் ஜெகா, உமேஷ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் ஏ.ஆர். ஜெயகிருஷ்ணா நடிக்கிறார். கதாநாயகிகளாக லுப்னா, நிகாரிகா, சஹானா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ராஜேஷ், ரவிமரியா, டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சோனியா அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குகிறார் ஏ.ஆர். ஜெயகிருஷ்ணா.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது, ”பணம் என்பது இன்று எல்லோருக்கும் தேவையான ஒன்று தான்.
தேவைக்கு பணம் சேர்த்தால் பரவாயில்லை. ஆடம்பரத்துக்கும் பகட்டுக்கும் என்று சேர்க்க நினைத்தால் குறுக்கு வழிக்குத் தான் போக வேண்டும்.
மிகப் பெரிய பணக்காரர் ராஜேஷ் அவருக்கு செக்ரட்டியாக இருக்கும் சோனியா அகர்வால் ராஜேஷை கொலை செய்து விட்டு அந்த சொத்துக்கள் அனைத்தையும் அபகரிக்க திட்டமிடுகிறார் அந்த வலையில் வந்து சிக்குகிறார்கள் ஜெகா, உமேஷ் ஜெயகிருஷ்ணா மூவரும்.
இவர்களை வைத்து ராஜேஷை கொலை செய்ய சோனியா போட்ட சதி திட்டம் வெற்றி பெற்றதா இல்லையா என்பது தான் கதை. இதை வேகமான திரைக்கதை மூலம் விறுவிறுப்பாக படமாக்கி உள்ளோம்.
அமைதியான கடலுக்குள் தானே ஆக்ரோஷமான புயலும், பூகம்பமும் ஒளிந்திருக்கிறது. அது மாதிரி சோனியா அகர்வாலின் அமைதியான தோற்றத்தை மாற்றி இந்தப் படத்தில் அவரை வில்லியாக நடிக்க வைத்திருக்கிறோம். அந்த வகையில் இந்த உன்னால் என்னால் படம் வித்தியாசமாக இருக்கும்” என்றார்.