‘தெனாலிராமன்’ சரித்திர ஹிட் படத்தை தொடர்ந்து ஒரு சமூகப்படத்தில் ஹீரோவாகியிருக்கிறார் ‘வைகைப்புயல்’ வடிவேலு. படத்தின் பெயர் ‘எலி.’ தெனாலிராமனை இயக்கிய அதே யுவராஜ் தயாளன் தான் இந்தப்படத்தையும் இயக்கியிருக்கிறார்.
இப்படத்தில் வடிவேலுவுடன் சதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வித்யாசாகர் இசையமைக்க சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பில் சதீஷ்குமார், அமர்நாத் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இம்மாத இறுதியில் ரிலீசாகப் போகும் இப்படத்தின் புரமோஷனுக்காக ‘Talking Eli’ என்கிற மொபைல் கேம் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வடிவேலுவிடம் படத்தைத் தாண்டிய கேள்விகளும் வந்து விழுந்ததை தவிர்க்க முடியவில்லை.
பின்னே பரபரப்பான ஆளாயிட்டாரே..?
என்னைப் பார்க்கிற எல்லா ரசிகர்களும் ஏன் இவ்ளோ கேப்பு விடுறீங்கன்னு திட்டுறாங்க… அப்பத்தான் நாம உடனே ஒரு படம் பண்ணியாகனும்னு முடிவு பண்ணினேன். தம்பி யுவராஜ் சொன்ன இந்த எலி படத்தோட கதை எனக்கு ரொம்ப பொருத்தமா இருந்துச்சு. உடனே படத்தை ஆரம்பிச்சு முடிச்சிட்டோம்.
என்றவரிடம் ஷங்கர் அறிமுகப்படுத்திய சதா எப்படி வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க சம்மதிச்சார்னு எல்லோரும் ஆச்சரியப்படுறாங்க அது எப்படின்னே..? என்றார் ஒரு நிருபர்.
சதா இந்தப்படத்துல ஹீரோயினா நடிச்சிருக்காங்க. ஆனா எங்கூட அவங்களுக்கு டூயட் இல்ல. படத்துல அவங்க ஒரு கேரக்டரா வர்றாங்க. எங்கூட நடிக்கிறதுக்கு நெறைய ஹீரோயின்களை கேட்டுப் பார்த்துருக்காங்க. யாருமே நடிக்க முன் வரல. காமெடியன்னாலே முன்னணி நடிகைகள் யோசிக்கிறாங்க. அதைப்பத்தியெல்லாம் எனக்கு கவலை இல்லே. பணம் தர்றோம் நடிக்க வாங்கன்னே பக்கத்து ஸ்டேட்டுல இருந்து 100 நடிகைகள் வருவாங்க. அவங்களை நடிக்க வெச்சுட்டுப் போறோம் என்றார் கொஞ்சம் காட்டமாகவே…
‘எலி’ன்னு டைட்டில் வெச்சிருக்கீங்களே..? அப்போ இது ‘புலி’ படத்துக்கு போட்டியான படமான்னு ஒரு நிருபர் கேட்க…
ஒருத்தன் ‘சிங்கம்’னு படம் எடுக்குறான். இன்னொருத்தன் ‘புலி’ன்னு எடுக்குறான். நாங்க ‘எலி’ன்னு எடுக்கிறோம். அது அந்தப் பக்கம் போகுது. இது இந்தப் பக்கம் போவுது. அது ஒரு டைட்டில் அவ்ளோ தான். மத்தபடி ‘புலி’ படத்துக்கு போட்டியெல்லாம் இந்தப்படம் இல்லை. அடுத்த படத்துக்கு ‘கரப்பான் பூச்சி’ன்னு கூட டைட்டில் வைப்போம். டைட்டிலுக்கா பஞ்சம்? என்றவரிடம்
‘சகாப்தம்’ படத்தை பார்த்தீர்களா”? என்கிற கேள்வியை தட்டி விட்டார் ஒரு நிருபர்.
அந்தக் கேள்வியை கொஞ்சம் எதிர்பார்க்காத வடிவேலு கொஞ்சம் தடுமாற்றம் வந்தவராய் திரும்பவும் அந்தக் கேள்வியைக் கேட்டு நான் நடிச்ச படத்தையே இன்னும் பாக்கலேண்ணே… அதுக்கே எனக்கு நேரமில்லை… என்று எஸ்கேப் ஆனார்.