ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக 5 லட்சம் நிதி வழங்கிய வைரமுத்து!

டந்த சில வாரங்களாகவே ‘ஆண்டாள்’ சர்ச்சையில் சிக்கிய கவிஞர் வைரமுத்து நேற்று பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக நிதி உதவி வழங்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஹார்வர்டு தமிழ் இருக்கை ஆட்சிக்குழு இயக்குநர்களில் ஒருவரான ஆறுமுகம் முருகையாவிடம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் வைரமுத்து.

தொடர்ந்து அவர் பேசியதாவது…

”செம்மொழிக்கான தகுதிகள் என்று அறிவுலகம் வகுத்திருக்கிற அத்தனை தகுதிகளையும் கொண்ட பெருமை தமிழ்மொழிக்கு உண்டு.

நெடுங்கால இலக்கியங்களையும் இலக்கணங்களையும் அது படைத்திருக்க வேண்டும். சிலமொழிகளை ஈன்றெடுத்த தாய்த்தகுதி கொண்டிருக்க வேண்டும். உலக நாகரிகத்துக்குப் பங்களிப்புச் செய்திருக்க வேண்டும். இடையறாத தொடர்ச்சியோடு இயங்கி வர வேண்டும்.

இவைகளெல்லாம் செம்மொழிக்கென்று குறிக்கப்பட்ட சில தகுதிகள். இவை அனைத்தும் கொண்ட தமிழ் செம்மொழியென்று எப்போது அறிவிக்கப்பட்டதோ அப்போதே உலகப் பல்கலைக்கழகங்களின் இருக்கைகளில் அமரும் தகுதியைப் பெற்று விட்டது.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் இருக்கையில் தமிழ் அமரும் காலம் தொட்டு விடும் தூரத்தில் தான் இருக்கிறது. ஹார்வர்டு பல்கலைக்கழகம் 382 ஆண்டுகள் பழைமையானது. சிலஉலகத் தலைவர்களையும், நோபல் பரிசுபெற்ற அறிஞர்கள் பலரையும் பெற்றுத்தந்த பெருமைமிக்கது. இங்கே மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் உலக கவனத்திற்கு உள்ளாகின்றன.

இத்தனை பெருமைமிக்க பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைத்து அமரப்போவது தமிழுக்குப் பெருமை தானே என்று சிலர் கருதலாம். அதை மறுப்பதற்கில்லை. ஆனால், 382 ஆண்டுகள் பழைமையான ஒரு பல்கலைக்கழகத்தில் 3000 ஆண்டுகள் மூத்த மொழியான தமிழ் அமரப்போவது அந்தப் பல்கலைக்கழகத்திற்குத்தான் பெருமை என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த இருக்கையில் நிகழவிருக்கும் ஆய்வுகள் தமிழ் மொழியின் அதிகாரம் மிக்க உண்மைகளை உலகுக்கு அறிவிக்கும் என்று நம்பலாம்.

இந்தியப்பண்பாட்டின்சரிபாதியைவகுத்துக்கொடுத்ததுதமிழ்.ஆனால்,தமிழ்இன்னும்உலகத்தின்விளிம்புவரைக்கும்சென்றுவிழவில்லை.அதற்கானஅரசியல்காரணங்களையும்சமூகக்காரணங்களையும்நாம் அறிவோம்.

வடமொழி இலக்கியங்களை ஐரோப்பாவில் அறிமுகம் செய்ய ஒருமாக்ஸ்முல்லர் கிடைத்தது போல், அகிலத்திற்குத் தமிழை அறிமுகம் செய்ய இந்தத் தமிழ்இருக்கை சிலஅறிஞர் பெருமக்களை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு.

சென்னைப் புத்தகக் காட்சியில் இந்த ஆண்டு விற்பனையாகும் என்நூல்களின் மொத்தத்தொகையை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்குத் தருவதாக அறிவித்திருந்தேன். மொத்த விற்பனைத்தொகை 4 லட்சத்து 61 ஆயிரத்து 370 ரூபாய். அந்தத் தொகையை முழுமை செய்து 5 லட்சம் ரூபாயாகத் தமிழ் இருக்கைக்கு வழங்குகிறேன்.தொகை சிறியது தான். இது ஒரு நதியில் பெய்த 5 சொட்டு மழை தான்.
ஆனால்தமிழால் ஈட்டிய சிறுபொருள் தமிழுக்குப் பயன்படுகிறதே என்று நெஞ்சு நிறைகிறது. பெருமனதோடு பெற்றுக்கொண்டு பெருமைப்படுத்த வேண்டுகிறேன். இந்தத் தமிழ் இருக்கையை முன்னெடுத்துச் சென்ற மருத்துவர் ஜானகிராமன், திருஞானசம்பந்தன் இருவரும் பாராட்டுக்குரியவர்கள். தமிழ் இருக்கைக்குக் கொடைதந்த பெருமக்களெல்லாம் நன்றிக்குரியவர்கள்.

இதுவரை சில மாணவர்களுக்கு மட்டுமே தமிழ் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகம் தமிழுக்கு ஒரு பிரிவையே தொடங்கும் அதிகாரம் பெறுகிறது. மூவாயிரம் ஆண்டு கண்ட தமிழ் அமெரிக்காவில் முடிசூடுகிறது; மகிழ்ச்சி.” என்றார்.

விழாவில் எழுத்தாளர் சா.கந்தசாமி வாழ்த்துரை வழங்கினார். தொழிலதிபர் பழனி ஜி.பெரியசாமி தலைமையுரை ஆற்றினார். மற்றும் இவ்விழாவில் கவிஞர்கள் வா.மு.சேதுராமன், முத்துலிங்கம், அறிவுமதி, மனுஷ்ய புத்திரன், சல்மா, இளையராபரதி, மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து, எழுத்தாளர்கள் மாலன். சுப.வீரபாண்டியன், காவ்யா சண்முகசுந்தரம், இமையம், நடிகர்கள் பாண்டியராஜன், ஜோ மல்லூரி, தொழிலதிபர்கள் சிங்கப்பூர் முஸ்தபா, வசந்தபவன் ரவி, பாலு அய்யப்பன், தமிழ்ச்செல்வன், தமிழரசு, சிங்காரம் மற்றும் தமிழ் அறிஞர்களும் எழுத்தாளர்களும் கலந்துக் கொண்டனர்.

Harvard Universityharvard university tamil chair donationtamil chairVairamuthu
Comments (0)
Add Comment