சிலர் குறிப்பிட்ட தொகையை சம்பளமாக வாங்கிக் கொண்டு மீதிக்கு படத்தின் ஏரியாவை வாங்கிக் கொள்வார்கள். இன்னும் சிலர் படம் ரிலீசாகும் முன்பு வரை இரண்டு மூன்று தவணைகளில் வாங்குவார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி இருக்கும்.
அஜீத்தைப் பொருத்தவரை சம்பளம் வாங்குகிற விஷயத்தில் அவருக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்து வருகிறது. அதற்குக் காரணம் அவர் வாங்குகிற சம்பளத்துக்கு சரியான வருமான வரியைக் கட்டி விடுவார் என்கிற தகவல் தான்.
இந்த தகவலை தூரத்திலிருந்து படிக்கும் போது ”அடடா,, இப்படியும் ஒரு ஹீரோவா?” என்று எல்லோரும் ஆச்சரியப்படுவார்கள். ஆனால் அவரை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்களைக் கேட்டால் புலம்பித் தீர்ப்பார்கள்.
ஆமாம், 35 கோடி ரூபாய் ஒரு படத்துக்கு அஜீத் சம்பளம் வாங்கினால் முழு பணத்தையும் வெள்ளையிலேயே வாங்கி விடுவார். ஆனால் அந்த பணத்துக்கான வருமான வரியை வாங்கிய சம்பளத்திலிருந்து கட்ட மாட்டார். மாறாக 35 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்த தயாரிப்பாளரையே அந்தப் பணத்துக்கு உண்டான வரியைக் கட்டச் சொல்லி விடுவார்.
இப்படித்தான் அவரை வைத்து படமெடுக்காத தயாரிப்பாளர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறார் அஜீத்.
இந்த தகவலைக் கேள்விப்பட்ட அவரது நேரடிப் போட்டியாளரான விஜய்யும் அஜீத்தின் பாணியிலேயே சம்பளம் வாங்குவது என்கிற முடிவுக்கு தற்போது வந்திருக்கிறாராம்.
சமீபத்தில் ஒரு தயாரிப்பு நிறுவனம் விஜய்யை வைத்து படம் தயாரிக்க அவரோடு பேச்சு வார்த்தை நடத்தியது.
அப்போது முழு சம்பளத்தையும் வெள்ளையில் வாங்கிக் கொள்வதாக விஜய் சொன்னதும் ஆச்சரியப்பட்ட தயாரிப்பு நிறுவனத்திடம் கொடுக்கும் சம்பளத்துக்கான வருமான வரியை நீங்களே கட்டி விடுங்கள் என்று அஜீத் பாணியிலேயே அந்தப் பொறுப்பை அவர்கள் தலையில் கட்டி விட்டாராம்.
அதைக் கேட்டு ஆடிப்போன தயாரிப்பு நிறுவனம் ”சரி வசூலைக் குவிக்கிற ஹீரோவாச்சே எப்படி தட்டிக்கழிப்பது?” என்று வேறு வழியில்லாமல் ஓகே சொல்லி விட்டதாம்.
இனி “ வருமான வரியைச் சரியாக கட்டுபவர்” என்று அஜீத்தைப் போல, விஜய்யையும் ரசிகர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள்.