இன்றைக்கும் தமன்னா மாதிரியான தன்னை விட 20 வயது குறைந்த நடிகைகளுடன் டூயட் பாடிக்கொண்டிருக்கிறார் நடிகர் விக்ரம்.
ஆனால் அவருக்கோ திருமண வயதில் அக்ஷிதா என்ற பெயரில் மகள் இருக்கிறார். தன் செல்ல மகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்துடன் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்தார்.
நிச்சயம் செய்த கையோடு விக்ரம் மகளின் திருமணம் வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி நடைபெறும் என்று சொல்லப்பட்டு வந்தது. அதோடு அவர்களது திருமணத்தை கலைஞர் கருணாநிதி தான் முன்னிலை வகித்து நடத்தி வைப்பார் என்றும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் விக்ரம் மகளின் திருமணம் இன்று காலை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில் நெருங்கிய உறவினர்கள் புடைசூழ திடீரென்று நடந்துள்ளது.
இந்த திருமண விழாவில் கவிஞர் வைரமுத்து உட்பட கருணாநிதி குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மட்டும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கிறார்கள்.
ஏன் இந்த திடீர் மாற்றம் என்று விசாரித்தால் கருணாநிதியின் உடலநலத்தை சுட்டிக் காட்டுகிறார்கள்.
கருணாநிதி முன்னிலையில் திருமணம் நடைபெற வேண்டும் என்று மணமகன் வீட்டார் விரும்பினார்கள், ஆனால் பலரும் கூடும் திருமண மண்டபத்தில் அவர்களால் கருணாநிதிக்கு நோய் தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்று டாக்டர்கள் அறிவுரை வழங்கியிருக்கிறார்கள். அதனால் இன்று பிரபலங்கள் அதிகமாக அழைக்காமல், கருணாநிதி முன்னிலையில் ஆசியோடு அவரது கோபாலபுரம் வீட்டிலேயே திருமணத்தை எளிமையாக நடத்தியிருக்கிறார்கள்.
திருமணம் சிறப்பாக நடந்ததையடுத்து விரைவில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் இரு வீட்டாருக்கும் நெருக்கமான பிரபலங்கள் அழைக்கப்பட இருக்கிறார்கள்.