முடிவுக்கு வந்தது திரையுலக போராட்டம் – சாதித்தாரா விஷால்?

க்யூப், யு.எஃப்.ஓ. போன்ற டிஜிட்டல் நிறுவனங்களின் சேவைக்கான கட்டணம் அதிகமாக இருப்பதாகக் கூறி, கடந்த மார்ச் 1-ம் தேதியில் இருந்து புதுப்படங்கள் எதையும் ரிலீஸ் செய்யாமல், படப்பிடிப்பு நடத்தாமல், தொழில்நுட்ப வேலைகளையும் செய்யாமல் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தது.

இதனால் புதுப் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. அதன் விளைவாக தியேட்டர்களில் பழைய படங்களை திரையிட்டனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த ரசிகர்கள் கூட்டம் தியேட்டர்களுக்கு வரவில்லை.

இதையடுத்து, டிஜிட்டல் நிறுவனங்களுக்கும், தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே நடந்த பல கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படாமலே இருந்தது. இதனால், சினிமாவை நம்பியிருக்கும் சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அரசின் முன்னிலையில் இந்தப் பிரச்சனையை பேசித் தீர்ப்பது என்றும், அதுவரை போராட்டத்தை தொடர்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று ஏப்ரம் 17-ம் தேதி கடம்பூர் ராஜூ உள்ளிட்ட அமைச்சர்கள், விஷால், எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட திரையுலக நிர்வாகிகள், டிஜிட்டல் துறையைச் சார்ந்தவர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் ஆகியோர் அடங்கிய முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது.

காலை 11 மணிக்கு ஆரம்பித்த முதற்கட்ட பேச்சு வார்த்தையின் போது சிறிது நேரம் கருத்து வேறுபாடுகள் எழுந்தன. அதனால் உடன்பாடு ஏற்படுவதில் இழுபறி நிலை நீடித்தது. பிறகு மதிய உணவு இடைவேளை முடிந்து, மாலை 3 மணிக்கு மீண்டும் பேச்சு வார்த்தை தொடர்ந்தது. இரவு 9 மணி வரை நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில் ”தியேட்டர்களில் டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான கட்டணத்தை குறைப்பது, படங்களுக்கு ஏற்றாற்போல் டிக்கெட் கட்டணத்தை மாற்றியமைப்பது, தமிழகம் முழுக்க உள்ள தியேட்டர்களின் டிக்கெட் விற்பனையை கணினிமயம் ஆக்குவது, ஆன்லைன் டிக்கெட்டுக்கு சேவைக்கட்டணத்தை குறைப்பது” ஆகியவற்றில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது.

இதனால், சினிமா ஸ்ட்ரைக் வாபஸ் பெறப்படுகிறது. இதையடுத்து, கடந்த 47 நாட்களாக நடந்து வந்த திரையுலகப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. சினிமா ஸ்ட்ரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளதால், இனி புதிய படங்கள் வெளிவரும், படப்பிடிப்புகளும் நடக்கும். அது சம்பந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் இன்று மாலை நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் வெளியிடப்படும் என்றார் விஷால்.

இதற்கு முன்பு இதே தயாரிப்பாளர் சங்கத்தில் பலரும் தலைவராக இருந்தும் கூட திரையுலகின் நன்மைக்காக இத்தனை நாள் துணிந்து வேலை நிறுத்தம் செய்து நினைத்ததில் முக்கால்வாசி சாதித்ததில்லை. அந்த வகையில் தனது முடிவிலிருந்து பின் வாங்காமல் ஒட்டுமொத்த திரையுலகமும் தயாரிப்பாளர் சங்கம் முன்னெடுத்த இந்த போராட்டத்துக்கு முழுமையான வெற்றி கிடைக்கா விட்டாலும் முக்கால்வாசி வெற்றி கிடைத்திருப்பதே திரையுலகுக்கு நல்லது தான் என்றும், அப்படி ஒரு முயற்சியை தைரியமாக எடுத்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்று சாதித்த விஷாலை திரையுலகினர் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Kadambur RajuProducer CouncilTamil Cinema StrikeTFPCtfpc strikevishal
Comments (0)
Add Comment