தனக்குப் பிறகு தான் சார்ந்த துறையில் தன் வாரிசைகளையும் வளர்த்து விட்டு துட்டு சம்பாதிக்க ஆசைப்படும் கலைஞர்களுக்கு மத்தியில் கானா பாலா எடுத்திருக்கும் முடிவு அவரது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் திரையுலகினருக்கே அதிர்ச்சியாகத் தான் இருந்தது.
இதற்கும் அவர் சினிமாவில் பாட வந்த சில வருடங்கள் தான் ஆகியிருக்கிறது. அதற்குள் எனக்கு கிடைத்த வாய்ப்புகள் போதும், எனக்குப் பின்னால் நல்ல திறமையோடு பல கானா பாடகர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு அந்த வாய்ப்பைக் கொடுங்கள் என்பது தான் தன்னைத் தேடி வரும் இசையமைப்பாளர்களிடன் அவர் வைக்கும் கோரிக்கை.
சில தினங்களுக்கு முன்பு ‘விதி மதி உல்டா’ படத்தின் ஆடியோ வெளியீட்டின் சிறப்பு இசை நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவின்யுவில் நடந்தது.
இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அஸ்வின் வினாயகமூர்த்தி இந்தப்படத்தின் பாடல்களை ரசிகர்கள் முன்னிலையில் நேரடி இசை நிகழ்ச்சியாக நடத்தி படத்தில் பாடிய பாடகர்களை வரவழைத்து மறுபடியும் பாடவைத்து அவரும் பாடி ஆடி விழாவை சிறப்பாக நடத்தினார்.
விழாவில் படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகருமான ரமீஸ்ராஜா, நாயகிஜனனி ஐயர், டேனியல் பாலாஜி, சென்ராயன், ரெட்ஜெயன்ட் ராஜாசங்கர், பின்னணிபாடகர் சின்மயி, நடிகை சீதா, நடிகர் கலையரசன், படத்தின் டைரக்டர் விஜய் பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் மேடையேறி இப்படத்தில் தான் பாடிய ஒரு பாடலைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்த கானாபாலா “எனக்கு உடம்பு சரியில்ல. இருந்தாலும், என்னை இந்தப்படத்தில் பாட வச்ச இசையமைப்பாளர் அஸ்வினுக்காக வர வேண்டும் என்பதற்காகவே நான் இங்கு வந்தேன். நிறைய பேசணும்னு நினைக்கிறேன். பட்… உடம்பு ஒத்துழைக்கல. என்று பாடலின் சில வரிகளைப் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். பின்னர் பேசிய அவர் “நான் சினிமாவில் பாடுவதை முழுவதுமாக நிறுத்தி விட்டேன். எனக்குப் பின்னால் எக்கச்சக்க திறமையான கானா கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்பதற்காகவே இப்படி ஒரு முடிவை எடுத்தேன்” என்றார்.
‘விதி மதி உல்டா’ படத்தின் பாடல் காட்சிகள் யு-ட்யூப்பில் வெளியிடப்பட்டிருந்தது அதை இதுவரை 35,00000 லட்சம் பேர் பார்த்து ரசித்திருக்கிறார்கள். அந்த வகையில் இப்படத்தின் பாடல்கள் அத்தனையும் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது என்கிற தகவலை பகிர்ந்து கொண்டார் படத்தின் ஹீரோ ரமீஷ் ராஜா.