வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம் முனிவேலன் தயாரித்துள்ள படம் வெப் (WEB). அறிமுக இயக்குனர் ஹாரூண் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சாஷ்வி பாலா, சுபப்பிரியா, நடிகர் முரளி ராதாகிருஷ்ணன், அனன்யா மணி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். கிறிஸ்டோபர் ஜோசப் படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க, சுதர்ஷன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். நிர்வாக தயாரிப்பாளராக கே.எஸ்கே செல்வா பொறுப்பேற்றுள்ளார்.
வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் இதன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று காலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் கே.ராஜன், தனஞ்செயன், இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், சுப்பிரமணிய சிவா, நடிகை ரேகா நாயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவினில் இயக்குனர் ஹாரூண் பேசும்போது,
“நல்ல படைப்புகளை தொடர்ந்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. பெரும்பாலும் ஒரு கட்டடம் அழகாக தெரிவதைத்தான் பார்ப்பார்கள். ஆனால் அதன் அடித்தளம் யாருக்கும் தெரியாது. அதுபோலத் தான் தயாரிப்பாளர்களும்.. கார்த்திக் ராஜாவிடம் இந்த படத்தின் கதை பற்றி கூறிய போது, அப்பா (இளையராஜா) சைக்கோ படத்திற்கு ஒரு விதமாக பண்ணினார். நான் இதில் ஒரு புது மாதிரியாக முயற்சிக்கிறேன் என்று ஊக்கமளித்தார். நடிகர் நட்டி புது இயக்குனர் என நினைக்காமல் 100% எங்களை நம்பினார். இந்த படத்தின் கதாநாயகிகள் தங்களுக்குள் ஆடை சம்பந்தமாக எந்த பிரச்சினையும் வரவில்லை என்று சொன்னார்கள்.. அதற்கு காரணம் இரண்டு பாடல்களைத் தவிர கிளைமாக்ஸ் வரை அனைவருக்கும் ஒரே காஸ்டியூம் தான். ஜெயிலர் திரைப்படம் வரும் அதே மாதத்தில் எங்களது படமும் வெளியாவதில் மகிழ்ச்சி” என்றார்.