புரமோஷனுக்கு வராமல் டிமிக்கி! – ஏன் இப்படிச் செய்கிறார் ஜெய்?

கையில் நாலு காசு இருந்தால் நானும் ஹீரோ தான் என்று நடிக்கக் கிளம்பி விடுகிறார்கள் சில புதுமுகங்கள்.

ஆனால் ‘சத்தம் போடாதே’, ‘சென்னை 28’ உள்பட பல படங்களில் நடித்த நிதின் சத்யா, ‘ஜருகண்டி’ படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக பணியாற்றிய பிச்சுமணி இயக்கியுள்ள இந்த படத்தில் நிதின் சத்யாவின் நெருங்கிய நண்பரும், இளம் ஹீரோக்களில் ஒருவருமான ஜெய் நடித்துள்ளார்.

படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில், அதற்கு முன்பாக பத்திரிகையாளர்களுக்கு போட்டுக் காண்பித்தார்.

அப்போது பேசிய நிதின் சத்யாவிடம் ”ஏன் ஜெய் எந்தப் படங்களின் புரமோஷனிலும் தலை காட்டுவதில்லை? எதற்காக பத்திரிகையாளர்களை சந்திக்காமல் டிமிக்கி கொடுக்கிறார்?” என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதுகுறித்துப் பேசிய நிதின் சத்யா “ஜெய் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சரியான நேரத்திற்கு வந்து விடுவார். ஷூட்டிங் எல்லாம் முடிந்த பிறகு தான் அவர் ஸ்பாட்டை விட்டே புறப்படுவார்.

அவர் நடிக்கிற படங்களின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதது அவரது விருப்பம். ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை இருக்கும். அப்படித்தான் அவரும் ஒரு கொள்கை வைத்திருக்கிறார். அது தவறு என்று சொல்ல முடியாது. ஜெய் எனது நண்பர் தான். அதனால் அவரை அழைத்தால் பட புரோமோஷனுக்கு வரலாம். ஆனால் அவரை அழைக்க வேண்டுமா? என யோசிக்கிறேன்.

பத்திரிகையாளர்களை சந்திக்க அவருக்கு என்ன தயக்கம் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை ஏதாவது பிரச்சினை இருக்கலாம். அது எனக்கு தெரியாது. ஆனால் அவர் முன்பு போல் இல்லை. தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குள் நான்கு படங்களில் நடித்து விட்டார்” என்றார்.

நமக்கு தேவைப்படும் போது, நாம் செய்வதை நியாயப்படுத்துகிறோம். அந்த வகையில் ஹீரோ ஜெய் சொந்தமாக டிராவல்ஸ் தொடங்க நினைத்து வங்கியில் லோன் கேட்டு செல்லும் ஹீரோவுக்கு, கடன் மறுக்கப்படுகிறது. இதனால் வேறு வழிகளில் அவர் கடன் வாங்கி பிரச்சினைகளில் சிக்கிக் கொள்கிறார். அதில் இருந்து எப்படி அவர் மீண்டு வருகிறார் என்பதே இந்த ‘ஜருகண்டி’ படத்தின் கதையாம். படத்தை அடுத்த மாதம் ஜூலையில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

Actor JaiJaiJarugandiNithin SathyaReba Monica John
Comments (0)
Add Comment