அன்பிற்கினியாள்- விமர்சனம்
மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ஹெலன் படம் தான் தமிழில், கீர்த்திபாண்டியன் , அருண்பாண்டியன் நடிப்பில் அன்பிற்கினியாளாக மாறியிருக்கிறது. தன் மகளுக்காக நடிகர் அருண்பாண்டியனே இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். கோகுல் இயக்கியிருக்கிறார்.
கனடா செல்ல வேண்டும் என்ற கனவோடு உழைக்கும் கீர்த்திக்கு அவர் வேலை செய்யும் பீனிக்ஸ்மால் ரெஸ்டாரெண்டில் ஒரு ஆபத்து நேர்கிறது. அதில் இருந்து அவர் எப்படி வெளியில் வந்தார் என்பதே படத்தின் கதை. மிகச் சாதரணமான கதையாக தெரிந்தாலும்..படத்திற்குள் இருக்கும் அடர்த்தியான உணர்வுகளும் நேர்த்தியான திரைக்கதையும் இரண்டு மணி நேரம் நம்மைக் கட்டிப்போட்டு விடுகிறது.
கீர்த்திபாண்டியனின் நடிப்பில் இந்தப்படம் அவருக்கு ஒரு மைல்கல். ஒவ்வொரு ப்ரேமிலும் கவனம் ஈர்க்கிறார். அருண்பாண்டியன் அவரது கேரக்டரை தனது நடிப்பால் முழுமையாக்க மிக கஷ்டப்படுகிறார். பிரவீனின் கதாப்பாத்திரம் சரியாக கோர்க்கப்பட்டுள்ளது. அவரும் சரியாக நடித்துள்ளார். படத்தில் பங்குபெற்ற மற்ற எல்லா நடிகர்களுமே தங்கள் பங்களிப்பைச் சிறப்பாக செய்துள்ளார்கள்.
படத்தின் பெரிய ப்ளஸ் ஜாவித்தின் பின்னணி இசையும், மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவும். இருவரின் அபார உழைப்பும் ஒவ்வொரு காட்சிகளிலும் தெரிகிறது. எடிட்டரும் தன் வேலை செவ்வனே செய்துள்ளார். இயக்குநர் கோகுல் தனது வழக்கமான பேட்டர்னில் இருந்து மாறுபட்ட வசனங்களை எழுதி ரசிக்க வைத்திருக்கிறார்.
படத்தின் துவக்கமும் அதைத்தொடர்ந்த இருபது நிமிட படத்தின் பயணங்களும் சிறு அயர்ச்சியை தருவது உண்மை. அந்த இடங்களில் இன்னும் எனர்ஜியை கூட்டி இருக்கலாம். மற்றபடி படத்தில் எந்தக்குறையும் பெரிதாக சொல்லிட முடியாது.
படத்தில் கீர்த்தி பாண்டியனின் தன்னம்பிக்கையை உணர்த்தும் காட்சிகள் நிறையவே இருக்கின்றன. அந்தக்காட்சிகள் தான் எத்தகைய இடரையும் எதிர்கொள்ள வைப்பதற்கான சாட்சிகளாகவும் இருக்கின்றன. அந்த தன்னம்பிக்கை அனுபவத்திற்காக நாம் அன்பிற்கினியாளை வரவேற்றே ஆகவேண்டும்!
RATING : 3.5/5