ரஜினியோட புகழை கெடுக்காதீங்க… : சிகரெட் பிடிக்கும் தனுஷுக்கு அன்புமணி கண்டனம்

Get real time updates directly on you device, subscribe now.

dhanush-smoke

னது படங்களில் தொடர்ந்து சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடித்து வரும் தனுஷுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் தனுஷூக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :

“இன்று தமிழ்நாட்டின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக நீங்கள் திகழ்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.

‘மாரி’ திரைப்படத்தின் ஏராளமான காட்சிகளில் நீங்கள் புகைபிடித்தபடி நடித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் உங்களுடைய ரசிகர்களாக இருக்கும் நிலையில் இந்த தவறான செயல் உங்கள் ரசிகர்களை புகையிலைக்கு அடிமையாக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்றே நம்புகிறேன்.

புகையிலைக்கு அடிமையாவோரில் 50% பேர், புகையிலையால் ஏற்படும் கொடிய நோய்க்கு பலியாகி உரிய வயதாகும் முன்பே வலிமிகுந்த மரணத்தை தழுவுவார்கள் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் புகைபழக்கத்துக்கு அடிமையாகும் உங்களது ரசிகர்களும் இடம்பெறக் கூடும்.

இளைஞர்களிடையே புகைபிடிக்கும் பழக்கம் அதிகரிப்பதற்கு திரைப்படங்களில் இடம்பெரும் புகைபிடிக்கும் காட்சிகள் முக்கிய காரணமாக உள்ளன. சிகரெட் நிறுவனங்கள் திரைப்படங்களை பயன்படுத்தி புகைபழக்கத்தை திணித்து வருகின்றன. உரிய வயதாகும் முன்பே இறந்து போகும் வாடிக்கையாளர்களை ஈடுகட்டவே சிகரெட் நிறுவனத்தினர் திரைப்படங்களில் மறைமுகமாக விளம்பரம் செய்கின்றனர்.

Related Posts
1 of 97

‘மாரி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள புகைபிடிக்கும் காட்சிகள் தற்செயலானவை அல்ல என்றே கருத வேண்டியுள்ளது. தமிழகத்தின் முன்னணி நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், சூரியா, விக்ரம் உள்ளிட்டவர்கள் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என வாக்குறுதி அளித்து அதனை உறுதியாக பின்பற்றியும் வருகின்றனர்.

அதை விட முக்கியமாக, உங்களது மாமனாரும், தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் எனப் புகழப்படுபவருமான நடிகர் ரஜினிகாந்த் அவர்கள், திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல், தனது ரசிகர்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட்டுவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகப் பண்பாட்டில் மாமனார் என்பவர் தந்தைக்கு சமமானவராகக் கருதப்படுகிறார். தந்தையின் புகழைக் காப்பாற்றும் கடமை மகனுக்கு இருப்பது போல – மாமனாரின் புகழைக் காப்பாற்ற வேண்டிய கடமை மருமகனுக்கும் உண்டு. திரைப்படங்களில் புகைபிடிக்கும் உங்களது செயல் உங்களது மாமனார் நடிகர் ரஜினிகாந்த் புகழுக்கு இழுக்கு செய்வதாக அமைகிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எனவே, தமிழ்நாட்டின் பல லட்சம் சிறுவர்கள், இளைஞர்களின் எதிர்கால நலன் கருதி திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சியில் நடிப்பதை நீங்கள் கைவிட வேண்டும். மேலும், இனி திரைப்படங்களில் புகைபிடிப்பிடிக்க மாட்டேன் என பகிரங்கமாக அறிவிக்கவும் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக இளைஞர்களின் நலனுக்காக மட்டுமின்றி, உங்களது உடல்நலத்துக்காகவும் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை நீங்கள் கைவிட வேண்டும் என்று உங்களது சகோதரனாக, ஒரு மருத்துவனாக கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் நீண்ட ஆயுளைப் பெற்று, தமிழ்த் திரையுலகில் பலப்பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன்” இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.