அரண்மனை 4- விமர்சனம்
சம்மர் விருந்து எனச் சொல்லப்படும் அரண்மனை 4 நிஜமாகவே விருந்து தானா?
உள்நாட்டு பேய் போரடித்துவிட்டது என்று அசாம் பேயை அழைத்து வந்து டெரர் காட்டியுள்ளார் சுந்தர் சி. நீங்க எவ்வளவு பழசுன்னு சொல்ல முடியுமோ அதைவிட எல்லாம் பழசு படத்தின் கதையும் திரைக்கதையும். ஆனாலும் அசராமல் ஆடியுள்ளார் சுந்தர் சி. அசாமில் உள்ள ஒரு தீய சக்தி, தமன்னாவின் குடும்பத்தை கொன்று குவித்ததோடு தமன்னாவின் குழந்தையையும் கொல்லத்துடிக்கிறது. அக்குழந்தையை காப்பாற்றும் பொறுப்பு ஹீரோவுக்கு வருகிறது. அடுத்து என்ன நடந்தது? என்பதாக படத்தின் திரைக்கதை விரிகிறது
நீங்க எவ்வளவு அழுத்திக்கேட்டாலும் நான் இவ்வளவு தான் நடிப்பேன் என அடம்பிடித்து அளவைத் தாண்டாமல் நடித்துள்ளார் சுந்தர் சி. தமன்னா பேயாக நடித்ததை விட, ப்ரோமா சாங்கில் பேயாட்டம் போட்டு ஆடியிருப்பது அல்டிமேட் ரகம். ராஷி கண்ணா கொடுத்த வேலையை கர்மமே கண்ணாகச் செய்துள்ளார். யோகிபாபு, விடிவி கணேஷ், மறைந்த நடிகர் ஷேசு, டெல்லி கணேஷ், கோவை சரளா ஆகியோரின் காமெடி ஓரளவு எடுபட்டுள்ளது
இசை அமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி 40 நாள் பேய்க்கு விரதம் இருந்து இசையமைத்திருப்பார் போல. பேய்க்கு கொடுத்திருக்கும் பில்டப் எல்லாம் பகீர் ரகம்..ஒளிப்பதிவு தனிப்பதிவாக இல்லாவிட்டாலும் ஓகே. சிஜி தான் அநியாயத்திற்கு சொதப்பியுள்ளது. க்ரீன்மேட் நான் தான் நான் தான் என பல இடங்களில் காட்டிக்கொடுக்கிறது
முன்பாதியில் ஜோடிக்கப்பட்ட காமெடி காட்சிகள், எமோஷ்னல் காட்சிகள் மருந்திற்கும் எடுபடவில்லை. படத்தை கொஞ்சமேனும் காப்பாற்றுவது பின்பாதி தான். விமர்சனம் எழுதுபவர்களை குறி வைக்காமல் விளையாட்டுப் பிள்ளைகளை குறிவைத்து சுந்தர் சி படம் எடுத்திருப்பதால் இந்தப் படம் மினிமம் கியாரண்டி என்பது கன்பார்ம்
2.75/5