அரண்மனை3- விமர்சனம்
அதே மாவு, அதே கல்லு, ஒரே தோசை..இதேதான் அரண்மனை3. சின்ன மாற்றம் தேங்காய் சட்னிக்குப் பதில் புதினா சட்னி.
வேறோருவனின் காதலியை அவனின் மணமேடையிலே தனது மனைவியாக்கிக் கொள்ளும் சம்பத்திற்கு மனைவியாலும் காதலனாலும் அவர்கள் இருக்கும் போதும் பிரச்சனை வருகிறது. இறந்த பிறகும் பிரச்சனை வருகிறது. சம்பத் வசிக்கும் அந்த அரண்மனைக்குள் பேயாக உலா வரும் சம்பத்தின் மனைவியான ஆண்ட்ரியா சம்பத்தை எப்படி பழி தீர்க்கிறார். சம்பத்தின் தங்கை கணவனான சுந்தர் சி எப்படி அரண்மனை ஆவிகளை விரட்டினார்? என்பதே அரண்மனை3.
ஆமா இந்தப்படத்திற்கு ஏங்க ஆர்யா? ஜுனியர் ஆர்டிஸ்ட் போல அவ்வப்போது வந்து ராஷிகண்ணாவை சைட் அடித்துவிட்டுப் போகிறார். யோகிபாபு, மனோபாலா, விவேக் கூட்டணி சில இடங்களில் ரசிக்க வைக்கிறது. (மிஸ் யூ விவேக்) ஆண்ட்ரியா தன் முக பாவனைகளால் பயமுறுத்தவும் செய்கிறார். பரிதாபம் காட்டவும் வைக்கிறார். கதைப்படி திரையில் வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பவராக சுந்தர் சி- இருப்பதால் அவர் தான் படத்தின் ஹீரோவாக இருக்கிறார். முந்தைய அரண்மனை சீக்வென்ஸ்களில் என்ன செய்தாரோ அதையே இதிலும் செய்கிறார்.
படத்தின் CG சில இடங்களில் மிரட்டல்..பல இடங்களில் உருட்டல். பின்னணி இசை பாடல்கள் இரண்டுமே பெரியளவில் எடுபடவில்லை. கேமராமேன் காட்டுக்காட்சிகளில் தன் கவனத்தை காட்டு காட்டு என காட்டியிருக்கிறார். நன்று. கதையும் தெரியும்..இந்தக் கதைக்கு சுந்தர் சி எப்படியான திரைக்கதை அமைப்பார் என்பதும் தெரியும். பின் ஏன் நாம் பெரிதாக எதிர்பார்க்க வேண்டும்? எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தேமே என சென்று பார்த்தால் ஓரளவு பிடிக்கும் வகையில் படம் இருக்கிறது.
2/5