அப்பெல்லாம் எல்லாப் படமும் நல்லா ஓடும், ஆனா இப்போ..? : குமுறிய கலைப்புலி : குமுறிய கலைப்புலி

Get real time updates directly on you device, subscribe now.

Baanu

சவா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஸ்ரீ கமல்தீப் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பானு’.

இப்படத்தில் நாயகனாக நடித்து ஜீ.வி. சீனு இயக்கியுள்ளார். கொல்கத்தாவைச் சேர்ந்த நந்தினிஸ்ரீ நாயகியாக நடித்துள்ளார். கே.அப்துல் ரகுமான் ஒளிப்பதிவு செய்ய உதயராஜ் இசையமைத்து இருக்கிறார்.

இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ் பங்ஷன் சமீபத்தில் சென்னையில் நடந்தது.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் இசை மற்றும் ட்ரெய்லரை வெளியிட தமிழ் டிஜிட்டல் பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி ஜி. சேகரன் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் கலைப்புலி ஜி.சேகரன் பேசும்போது “ஒரு காலத்தில் திரையுலகில் எல்லாருமே தென் சென்னைக்காரர்களாக இருந்தார்கள். அப்போது தான் எஸ்.தாணு, நான் எல்லாம் வட சென்னையிலிருந்து வந்தோம். தாணு, நான் எல்லாம் வண்ணாரப்பேட்டைதான். இவர்களும் வட சென்னையிலிருந்து இப்போது வந்திருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் எந்தப் படம் போட்டாலும் திரையரங்கில் ஓடும். இப்போது நிலைமை மாறி விட்டது. சின்ன படம் ஓடுமா, பெரிய படம் ஓடுமா என்று தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது. சில நேரம் ஒரு சின்ன படம் ஒடுகிறது .10 படங்கள் ஓடுவதில்லை. சில நேரம் ஒரு பெரிய படம் ஓடுகிறது. எல்லாரும் படம் எடுத்து விட்டு விளம்பரம் எப்படி செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரு ஊரில் இரண்டு ரயில்வே ட்ராக் இருந்ததாம். ஒன்று ரயில் ஒடும் ட்ராக், இன்னொன்று ரயில் போகாத பழுதுபட்ட ட்ராக். பழுதுபட்ட பாதை அது. ரயில் ஓடும் ட்ராக்கில் ஒரே ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருந்ததாம். பழுதுபட்ட பாதையில் பல குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததாம். ரயில் அருகில் வரும் போது எந்த ட்ராக்கில் போவது ஒரு குழந்தையா பல குழந்தைகளா என ஓட்டுநர் தவித்த போது பல குழந்தைகள் தான் முக்கியம் என்று முடிவெடுத்தாராம். அப்போது ஒருவர் சொன்னாராம் அந்த ஒரு குழந்தை ரயில்வே மந்திரியின்குழந்தை என்றாராம் உடனே பழுதுபட்ட ட்ராக்கில் ரயிலை ஏற்றி பல குழந்தைகளைக் கொன்று விட்டாராம் அதுமாதிரி இன்று ஒரு பெரிய படத்தைக் காப்பாற்ற பல சின்ன படங்கள் செத்துக் கொண்டிருக்கின்றன. இன்னும் சில படங்கள் பாதிக்கப்படுகின்றன.” என்றார்.

அபிராமி ராமநாதன் பேசும்போது ”தியேட்டர்களுக்கு படம் கொடுப்பது சின்ன படத் தயாரிப்பாளர்கள் தான். ஆண்டுக்கு 160 படங்கள் வந்தால் 20 படங்கள் தான் பெரிய படங்கள். மற்றவை எல்லாம் சிறியபடங்கள் தான். பெரிய படங்களை மட்டும் நம்பினால் சினிமாத் தொழிலாளர்கள் என்ன ஆவார்கள்? சினிமாவை மட்டும் நம்பி 5 லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு வாழ்வு கொடுப்பவை சின்ன படங்கள்தான்.

எவ்வளவோ பேர் படமெடுக்க வருகிறார்கள் பணம் சம்பாதிப்பதை விட நல்லபடம் எடுத்தோம் என்கிற பெயரைச் சம்பாதிக்க, வாழ்த்தைச் சம்பாதிக்கவே பலரும் படமெடுக்க வருகிறார்கள். டிவியில் 24 மணி நேரத்தில் 18 மணி நேரம் சினிமாவை நம்பித்தான் ஓட்டுகிறார்கள். ஒருவர் 10 சின்ன படங்கள் எடுத்தால் அதில் ஒரு படம் ஓடினால் போதும். அதை வைத்து 20 படங்கள் எடுப்பார் ஆனால் பெரியபடம் எடுப்பவர் ஒரு படம் எடுத்து அதுவும் ஓடவில்லை என்றால் காணாமல் போய் விடுவார். ‘பானு’ மாதிரியான சின்ன படங்கள் ஒடவேண்டும்.” என்றார்.

விழாவில் நாயகன் ஜீவி.சீனு,நாயகி நந்தினிஸ்ரீ, ஒளிப்பதிவாளர் அப்துல் ரகுமான், இசையமைப்பாளர் உதயராஜ், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், சாந்திலால், டாக்டர் காளிதாஸ், டிஜிட்டல் மேஜிக் அருள்மூர்த்தி., பி,ஆர்.ஓ. சங்கத்தலைவர் விஜயமுரளி ஆகியோரும் பேசினார்கள்.