லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ !

திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்கியுள்ள முதல் படத்திற்கு ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
படப்பிடிப்பு சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ படத்தின் முதல் பார்வையை காதலர் தினத்தை முன்னிட்டு பிரபல இயக்குநரும் கோயம்புத்தூர் மண்ணின் மைந்தருமான லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பாராட்டிய அவர், படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் பேனரில் கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாவீர் அசோக் தயாரிக்கும் இப்படத்தை ‘நாய் சேகர்’ திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் எழுதி இயக்கியுள்ளார்.
‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். திரைப்படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் கண்டு ரசிக்கும் வைகையில் இப்படம் உருவாகியுள்ளது, தொடக்கம் முதல் இறுதி வரை நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாத வகையில் இந்த திரைப்படம் இருக்கும் என்று குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இந்த திரைப்படத்தை கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்குவதோடு, நாயகனாகவும் நடிக்கிறார். பிரபல மலையாள நடிகையும் ‘கொட்டுக்காளி’ தமிழ் படத்தில் நடித்தவருமான அன்னா பென் நாயகியாக நடிக்க, முன்னணி நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.