‘செக்’ வைத்த பிவிபி சினிமாஸ் : புதுப்படங்களில் நடிக்க ஸ்ருதிஹாசனுக்கு தடை!
எப்படி அப்பா கமலும் எப்போதும் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறாரோ அப்படித்தான் ஸ்ருஹாசனும் அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்குவார்.
இந்த தடவை சிக்கியிருப்பது ‘படங்களில் நடிக்க தடை’ என்கிற சர்ச்சையில் வசமாக மாட்டியிருக்கிறார் ஸ்ருதி.
ஹைதாராத்தைச் சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனமான பிவிபி சினிமாஸ் நிறுவனம் ஸ்ருதிஹாசனுக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடர்ந்திருக்கிறது.
அந்த வழக்கு விசாரணையில் மறு உத்தரவு வரும் வரை ஸ்ருதிஹாசனை எந்தப்படத்திலும் கமிட் செய்யக்கூடாது என நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து பிவிபி சினிமாஸ் நிறுவனம் சற்றுமுன்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
எங்களுடைய பி.வி.பி சினிமா நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழியில் கார்த்திக், நாகர்ஜுனா நடிக்க வம்சி இயக்கும் புதிய படத்தை தயாரிக்க திட்டமிட்டிருந்தோம். இதில் ஹீரோயினாக நடிப்பதாக ஸ்ருதிஹாசனை ஒப்பந்தம் செய்தோம்.
அவர் ஒப்பந்தம் செய்துகொண்டபடி அதே தேதிகளில் மற்ற நடிகர்களிடமும் ஒப்பந்தம் வாங்கியிருந்தோம். இந்த ஒப்பந்தத்தின்படி பாதி படம் முடிவடைந்த நிலையில் தன்னால் இப்படத்திற்கு கொடுக்க தேதி இல்லை, அதனால் தன்னால் நடிக்க இயலாது என்று ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். எனவே, எங்களுக்கு மற்ற நடிகர்களிடம் வாங்கிய ஒப்பந்த தேதிகளும் வீணாகி விட்டது. இவருடைய இந்த செயலால் எங்களுடைய பணம் இழப்பு மட்டுமில்லாமல், எங்கள் நிறுவனத்திற்கு உண்டான நன்மதிப்பும் இழக்கப்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு பலகோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நேரமும் வீணாகிவிட்டது.
மேலும் மற்ற நடிகர்களிடம் வாங்கிய தேதிகளை மாற்ற வேண்டிய கட்டாயம் உருவாகி விட்டதால், அந்த நடிகர்களுக்கு எங்கள் நிறுவனத்தின் மீதான நல்லெண்ணமும், மரியாதையும் இழைக்கப்பட்டுள்ளது.
அவருடைய இந்த நடவடிக்கை மீண்டும் நடக்கக்கூடாது என்பதற்காகவும் மற்றும் எங்கள் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காகவும் இதை பிக்சர் ஹவுஸ் மீடியாலி மிட்டட் நிறுவனம் சிவில் மற்றும் கிரிமினல் வழக்காக பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கை விசாரிக்க ஏற்றுக்கொண்ட நீதிபதி இனி ஸ்ருதிஹாசன் அவர்கள், அடுத்த தீர்ப்பு வரும் வரையில் எந்நிறுவனமும் அவரை ஒப்பந்தம் செய்யக்கூடாதென்று ஆணை பிறப்பித்துள்ளார். மேலும் இந்த கிரிமினல் குற்றத்திற்காக அவரை விசாரணை செய்யும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
அப்பாவுக்கு புள்ளை தப்பாம பொறந்திருக்கு…!