என் வாழ்க்கை தான் ‘காக்கா முட்டை’ : தனுஷ் உருக்கம்
ஒரு படம் ரிலீசாகியும் பல விருது விழாக்களுக்கு அனுப்பி பல்ப் வாங்கி வரும். ஆனால் தனுஷின் காக்கா முட்டை படத்துக்கு ஒரு ஸ்பெஷல் உண்டு.
இந்தப்படம் ரிலீசாவதற்கு முன்பே பல விருது விழாக்களுக்கு அனுப்பப்பட்டு போன எல்லா விழாக்களிலும் விருதுகளை வாங்கி குவித்தது. சமீபத்தில் கூட தேசிய விருதையும் வாங்கியது.
அறிமுக இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள காக்கா முட்டை இரண்டு சிறுவர்களை மையப்படுத்திய கதையாக உருவாகியிருக்கும் படம். கடந்த 2014-ம் ஆண்டு டொராண்டோ சர்வேதச திரைப்பட விழாவில் திரையிட தேர்வானது. அதைத் தொடர்ந்து இரண்டு தேசிய விருதுகளையும் இப்படம் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த படம் தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் 3 விருதுகளை வாங்கியுள்ளது. சிறந்த திரைப்படத்திற்கான விருது, பார்வையாளர்களின் தேர்வு, சிறந்த நடிகர்களுக்கான கிராண்ட் ஜூரி விருது என இந்த மூன்று விருதுகளையும் காக்கா முட்டை படம் வென்றுள்ளது.
இப்படி அடுத்தடுத்து விருதுகளை வாங்கிக்குவிப்பது படக்குழுவினரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும், வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் இணைந்து தயாரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் ரிலீஸ் செய்ய உள்ளது.
இப்படி பல பெருமைகளைப் பெற்று வரும் காக்கா முட்டை படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் பங்ஷன் சென்னையில் நடைபெற்றது. விழாவில் படத்தின் இயக்குநர் மணிகண்டன், இப்படத்தில் நடித்த சிறுவர்கள், ஐஸ்வர்யா ராஜேஷ், படத்தின் தயாரிப்பாளர்களான தனுஷ், வெற்றிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
படத்தின் ட்ரெய்லரை தனுஷ், வெற்றிமாறன் வெளியிட மணிகண்டன் மற்றும் சிறுவர்கள் பெற்றுக் கொண்டனர். விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசும் போது, ‘இந்த ஸ்கிரிப்டை நான் முதலில் படித்தபோதே எனக்கு மிகவும் பிடித்தது. என் வாழ்க்கையில் நடந்த விஷயம் போல் இருந்தது. இந்த ஸ்கிரிப்டை தனுஷுக்கு அனுப்பினேன். தனுஷுக்கும் பிடித்ததால் சேர்ந்து பண்ணலாம் என்று முடிவு செய்தோம். இப்படம் எல்லாருக்கும் பிடிக்கும் என்று நம்பினோம். முதலில் இப்படத்தை வெளியிடுவதற்கு முன்னதாகவே பிலிம் பெஸ்டிவலுக்கு அனுப்பலாம் என்று முடிவு செய்தோம். அதற்கு தனுஷும் சம்மதம் தெரிவித்தார். அதன்படி பிலிம் பெஸ்டிவெலுக்கு அனுப்பி விருதுகளை பெற்றோம். மேலும் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்.
தனுஷ் பேசும் போது, ‘இந்தப் படத்தில் இரண்டு சிறுவர்கள் நடித்திருப்பார்கள். அவர்களை பார்க்கும்போது சிறுவன் நானாகவும், பெரியவன் என் அண்ணனாகவும் எனக்கு இருந்தது. இந்த கதை என் வாழ்க்கையில் நிகழ்ந்த நினைவுகளை ஞாபகப்படுத்தியது. அதனால் இப்படத்தை தயாரிக்க முன் வந்தேன். இப்படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். காக்கா முட்டை படமும், என்னுடைய தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கிவரும் ‘விசாரணை’ படமும் வெளியாவதற்கு முன்பே எனக்கு லாபத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது’ என்றார்.