தனுஷ்ராசி நேயர்களே- விமர்சனம்
RATING : 2/5
ராசியை வச்சி படமெடுத்தவங்க ராசி பார்த்து படம் எடுத்திருக்கப் படாதா? படுத்திட்டீங்களேய்யா.
தனுஷ்ராசி ஹீரோவுக்கு கன்னிராசி பொண்ணு தேவை. ஒண்ணுவிட்ட மாமாவுக்கு போன் போடணும்னாலும் நல்லநேரம் பார்க்குற ஹீரோவுக்கு மேரேஜ் மேட்டர் செட்டாச்சா என்பது தான் படத்தின் கதை. பிரபல நடிகர் சந்தான பாரதியின் மகன் தான் இயக்குநர். துருப்பிடித்தப் போன திரைக்கதையா இருந்தாலும் படத்தை கலர்புல்லா இயக்கியதில் கவனம் ஈர்க்கிறார். முப்பதாவது சீன்ல வர்ற விசயத்தை மூனாவது சீன்லே நாலாவது சீட்ல இருக்கிற ஆடியன்ஸ் சொல்லிடுவார். அவ்வளவு சொதப்பலான திரைமொழி.
அப்பா பெயரை அடுத்தப்படத்தில காப்பாத்திடுங்க சஞ்சய்
படம் நெடுக சில பட்டாஸ் (ஹீரோயின்ஸ்) கிளிகளை ட்ரஸை கிழித்துவிட்டு உலவவிட்டுள்ளார்கள். அது படத்தை கரையேற்றிவிடும் என்றும் நம்பியும் இருக்கிறார்கள். மனதை மயக்குற மாதிரியோ மனதை வருடுற மாதிரியோ ஒரு சீனும் இல்லை. அவர்கள் வருவதெல்லாம் சீனாவும் இல்லை. ஹரிஸ் நடிப்பும் முனிஷ்காந்த் சிரிப்பும் பெரிதாக ஒட்டவில்லை. அதுவும் யோகிபாபு இடையிடையே காமெடி என்ற பெயரில் கதை சொல்வதெல்லாம் கொலவெறி தாக்குதல். தயவுசெய்து யோகிபாபு கொஞ்சநாள் வடிவேலு காமெடிகளை யூட்யூபில் பார்க்க வேண்டும்.
பெண்கள் காதலை ஒரு விசயமா வச்சிக்கிட்டு தன் கனவுகளை தள்ளிப்போடக்கூடாது என்ற ஒரு விசயம் மட்டும் படத்தின் பேராறுதல். கடைசியில் ராசிலாம் ஒரு மேட்டரே இல்லை என்ற ஒரு குறுந் தகவலைச் சொல்ல இப்படி பெருந்தலைவலியை ஏற்படுத்தியதிற்கு கோகுலம் நிறுவனம் பொறுப்பல்ல. கதை இலகாவை கவனிச்சிவங்க தான் பொறுப்பு.
மொத்தத்தில் தனுஷ்ராசி நேயர்களே இரண்டு மணிநேரம் இருபத்தியோரு நிமிடமும் சந்திராஷ்டமம் தான்