தாயம் – விமர்சனம்
RATING : 2/5
குறும்பட இயக்குநர்களின் படங்கள் என்றாலே கோடம்பாக்கத்து ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகி விட்ட இந்த காலகட்டத்தில் அதே வகையறாவிலிருந்து வந்திருக்கும் கண்ணன் ரங்கசாமியின் படம் தான் இந்த ‘தாயம்.’
ரஜினிகாந்த் நடித்த ‘சிவாஜி’ படத்தில் வழிக்கு வராத பெருமுதலாளிகளை ஒரு ஆபீஸ் ரூமுக்குள் அடியாட்களை அனுப்பி அடித்து துவைப்பாரே? அப்படி ஒரு லைன் தான் இந்தப்படமும்! என்ன அதில் பவுன்சர்கள் அடிப்பார்கள். இதில் ஒரே ஒரு ஆவி அடிக்கிறது.
சரி கதைக்குள் வருவோம்.
பிரபல கார்ப்பரேட் நிறுவனத்தின் சி.ஈ.ஒ பதவிக்கான இண்டர்வியூவுக்கு ஐந்து இளைஞர்களும், மூன்று பெண்களும் வருகிறார்கள்.
அவர்களிடம் வரும் மேல் அதிகாரி இந்த அறைக்குள் இதற்கு முன்பு சி.ஈ.ஒ ஆக இருந்தவர் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய ஆவி இங்கே உலாவிக்கொண்டு இந்த பதவிக்கு யார் வந்தாலும் அவர்களை கொன்று விடுகிறது.
அதனால் உங்கள் அத்தனை பேரையும் இந்த அறைக்குள் ஒரு மணி நேரம் பூட்டி வைக்கிறோம். அந்த ஒரு மணி நேரத்தில் யார் உயிருடன் இருக்கிறார்களோ? அவர்களுக்குத்தான் இந்த வேலை. ஒருவேளை நீங்கள் அத்தனை பேரும் உயிருடன் இருந்தால் எல்லோருக்கும் அந்த சி.ஈ.ஒ வேலை தரப்படும் என்கிறார். இண்டர்வியூவுக்கு வந்தவர்கள் எல்லோரும் உயர் அதிகாரியின் அந்த கண்டிஷனுக்கு ஓ.கே சொல்கிறார்கள்.
அடுத்த ஒரு மணி நேரம் அந்த அறைக்குள் என்ன நடக்கிறது? இப்படி ஒரு இண்டர்வியூவை நடத்த அந்த நிறுவனத்துக்கு அப்படி என்ன நிர்பந்தம்? அதற்கு வேலையைத் தேடி வந்தவர்கள் ஏன் கம்பெனி சொல்லும் உயிரே போகிற அளவுக்குச் சொல்லும் அந்த கண்டிஷனுக்கு ஒப்புக் கொள்கிறார்கள்? என்பதே மீதிக்கதை.
ஒரே அறைக்குள் நடக்கிற கதை என்கிற புதிய முயற்சியில் இப்படத்தை தந்திருக்கிறார்கள். விஞ்ஞான வளர்ச்சியின் குறியீடாக இருக்கும் ஒரு கார்ப்பரேட் அலுவலகத்துக்குள்ளேயே பேய், பிசாசு, ஆவி பார்முலாவை புகுத்திய வகையில் கவனிக்க வைக்கிறார் இயக்குநர்.
உயர் அதிகாரி கதவை மூடிச் சென்றதும் யார் இறக்கப் போகிறார்களோ? அந்த ஆவி எப்படி எந்த வழியாக வருமோ? என்கிற பதட்டம் படம் பார்க்கிற ரசிகர்களுக்குள்ளும் தொற்றிக் கொள்கிறது.
ஆனால் நேரம் செல்லச் செல்ல சுவாரஷ்யமான விஷயங்கள் இல்லாத அந்த ஒரே அறைச் சம்பவங்கள் போரடிக்க ஆரம்பித்து விடுகிறது.
வழக்கமான ஆவிக்கதை என்றால் அதன் கிளைமாக்ஸ் எப்படியிருக்கும் என்று நம்மால் யூகித்து விட முடியும். ஆனால் இதில் நாம் எதிர்பார்க்காத விஷயத்தை தொட்டிருக்கிறார்கள்.
குறைந்த எண்ணிக்கையிலான நட்சத்திரங்களை வைத்துக் கொண்டு ஒரே அறை என்கிற புதுமையை கையிலெடுத்த இயக்குநர் காமெடி, ஹீரோ, ஹீரோயின் லவ், கனவு டூயட் என கொஞ்சம் மசாலாவையும் சேர்த்திருக்கலாம்.
எட்டு பேரில் சந்தோஷ் பிரதாப்பின் நடிப்பு தான் பாராட்டும்படி கேரக்டர் அமைந்திருக்கிறது. மற்றபடி அவருடனே படம் முழுக்க வரும் ஜீவா ரவி, ஷியாம் கிருஷ்ணன், ‘காதல்’ கண்ணன், அஜய், ஐரா அகர்வால், அன்மோல் சந்து, ஆஞ்சல் சிங், சந்தீப், சுபாஷ் செல்வம், ஜெய் தேவ், அருள், சஹானா, ஜெய்குமார் ஆகியோருக்கு பெரிய அளவில் ஸ்கோப் இல்லை என்றாலும் கொடுத்த காட்சிகள் வரை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.
சதீஷ் செல்வத்தின் பின்னணி இசை தேவைக்கேற்ப இசைந்திருக்கிறது. பாக்கியராஜின் ஒளிப்பதிவில் ஒரே அறையை பல ஆங்கிள்களில் காட்ட முயற்சித்திருக்கிறார்.
தியேட்டருக்கு வருகிற ரசிகர்களுக்கு புதுமையான கதைக்களம் தேவை தான். அதே சமயம் அவனுக்கான எண்டர்டெயின்மெண்ட் விஷயங்களையும் கொஞ்சமாவது மிக்ஸ் பண்ணிக் கொடுத்தால் தான் மனநிறைவைப் பெறுவான். அந்த மாதிரியான எந்த விஷயங்களும் இல்லாத படமாக தந்தது தான் இந்த தாயத்தின் பெருங்குறை.
தாயம் – விறுவிறுப்பில்லாத விளையாட்டு!