மூன்று மாதங்களில் நான்கு படங்கள் – பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் அதிரடி!
‘ராஜா ராணி’, ‘காக்கா முட்டை’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘குக்கூ’ மற்றும் ‘முண்டாசுப்பட்டி’ போன்ற தரமான படங்களை தமிழ்த் திரையுலகிற்கு வழங்கிய ‘பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’, இந்த 2017 ஆம் ஆண்டில் நான்கு படங்களை வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏ ஆர் முருகதாஸ், வெற்றி மாறன் அட்லீ போன்ற பிரபல இயக்குநர்கள் – தயாரிப்பாளர்கள் ஆகியரோடு மீண்டும் கை கோர்த்து இருப்பது மட்டுமின்றி நடிகர் விஷ்ணுவுடனும் தற்போது இணைந்து பணியாற்ற இருக்கின்றது. மேலும் வர இருக்கும் மூன்று மாதங்களில் தொடர்ந்து நான்கு திரைப்படங்களை ரசிகர்களுக்கு வழங்க இருக்கின்றது பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்.
பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான அட்லீ இணை தயாரிப்பு செய்து, திகில் கலந்த நகைச்சுவை பாணியில் உருவாகி இருக்கும் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தை மே 19 ஆம் தேதி அன்றும், ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில், அதிரடி கதை களத்தில் உருவாகி இருக்கும் ‘ரங்கூன்’ படத்தை ஜூன் 9 ஆம் தேதி அன்றும், தேசிய விருது பெற்ற வெற்றிமாறன் தயாரிப்பில், அரசியல் பிண்ணனியில் உருவாகி இருக்கும் ‘அண்ணனுக்கு ஜெய்’ படத்தை ஜூலை 7 ஆம் தேதி அன்றும் வெளியிடுகின்றது – பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ். இதைத் தவிர விஷ்ணு நடித்து, ஜூன் 23 ஆம் தேதி வெளியாகும் நகைச்சுவை படமான ‘கதாநாயகன்’ படத்தை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் விநியோகம் செய்கிறது.
பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸின் படங்கள் பெரும்பாலானவை, அறிமுக இயக்குநர்களால் இயக்கப்பட்டவை தான் என்பதை உறுதியாகவே சொல்லலாம். அட்லீயின் ராஜா ராணி, மணிகண்டனின் காக்கா முட்டை, சரவணனின் எங்கேயும் எப்போதும் போன்ற திரைப்படங்களே அதற்கு சிறந்த உதாரணம்.
தற்போது அதே பாணியை, ஹைக் இயக்கி இருக்கும் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற”, ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கும் ரங்கூன் மற்றும் ராஜ்குமார் இயக்கி இருக்கும் அண்ணனுக்கு ஜெய் படங்கள் மூலம் பின்பற்றி வருகிறது – பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்.