Good night- விமர்சனம்
குறட்டை வில்லனாக இருந்தால் எப்படி இருக்கும்?
இப்படியான வித்தியாச ஒன்லைன் ஒன்றில் பயணிக்கிறது படம். நாயகன் மணிகண்டனுக்கு பெரும் இடி இடித்தாற்போல் குறட்டை வரும். பக்கத்து வீட்டு ஆட்கள் வந்து புகார் சொல்லும் அளவிற்கு குறட்டை அவரைத் தொந்தரவு செய்கிறது. இந்நிலையில் அவர் வாழ்வில் ஓர் காதலும் கல்யாணமும் நடைபெற..குறட்டையால் இல் வாழ்வு என்னானது? என்பதே படத்தின் கதை
நாயகன் மணிகண்டன் கதைக்கு 100% பொருந்திப் போகிறார். மிக இயல்பான உடல்மொழியும் அவர் அடிக்கும் டைமிங் காமெடியும் படத்திற்கு பெரும்பலமாக அமைந்துள்ளது. அவர் போலவே ரமேஷ் திலக்கும் காமெடியில் அசத்தியுள்ளார். நாயகி மீதா ரகுநாத் கண்களாலே கதை சொல்கிறார். ரேச்சல், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட அனைத்துக் கதாப்பாத்திரங்களும் பக்காவாக வார்க்கப்பட்டிருக்கிறது. அனைவரும் சிறப்பாகவும் நடித்துள்ளனர்.
ஷான் ரோல்டன் கதையின் மென்மை அறிந்து இசை அமைத்துள்ளார். மாண்டேஜ்களாக வரும் பாடல்களும் ஈர்க்கவே செய்கின்றன. ஒளிப்பதிவாளர் கிடைக்கும் கேப்களில் கூட நல்ல ப்ரேம்களை வைத்துள்ளார். படமெங்கும் ஷாட்கள் எதார்த்தம் மீறாமல் கதை சொல்ல உதவுகின்றன
சிம்பிள் கதையை எல்லோருக்கும் கனெக்ட் ஆகும் வகையில் சொல்லி முதல் படத்திலே கவனிக்க வைக்கிறார் இயக்குநர் வினாயக் சந்திரசேகரன். குறைகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மனதிற்கு வாய்த்து விட்டால் குறட்டை கூட குறையில்லை என்ற விளக்கத்தோடு படம் நமக்கு குட்நைட் சொல்கிறது.
குட்நைட்- தூங்கவிடாத விழிப்பு
3.5/5
#Goodnight